உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை – வியாழேந்திரன்

VIyalenthiran
VIyalenthiran

உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.வியாழேந்திரன்  சபையில் தெரிவித்ததுடன் எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அரசி உட்பட சிறுதானியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் இருந்து மீளவே இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடுகள் முன்னேற கிராமங்கள் முன்னேற்றப்பட வேண்டும். கொரோனாவால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும்.  எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

விவசாயத்தை முன்னேற்ற  5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறையுடன் தொடர்புள்ள ஏனைய அமைச்சுக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து முன்னேற்ற வேண்டும்.

காணிப்பிரச்சினைகளை கால இழுத்தடிப்பின்றி விவசாய நடவடிக்கைகளுக்கு  பாதிப்பின்றி முன்னெடுக்கும் வகையில் வழங்குமாறு  அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பணித்துள்ளார். 

விவாசாய முன்னேற்றத்துக்கு  72,492 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் ஜனாதிபதி போன்றோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. 

ஆனால்  எதிர்கால சந்ததியின் உருவ பொம்மைகளே எரிக்கப்படுகின்றன. இரசாயன பசளை பயன்பாட்டால் பாடசாலை மாணவர்களுக்குக் கூட புற்றுநோய் ஏற்படுகிறது.

ஒருநாட்டின் வருமானம் வரி, வெளிநாட்டு முதலீடு, அந்நியச்செலாவணி என்பன ஊடாகக் கிடைக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விவசாயத்துறை குறித்து நிதி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். ஒவ்வொரு கிராமங்களையும் ஒவ்வொரு துறைசார் உற்பத்திக் கிராமங்களாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

விவசாயத்தை முன்னேற்றுவதற்காக வீதி கட்டமைப்பு, குளம், அணைக்கட்டு என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பாரபட்சமின்றி அனைத்து வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

எமது அமைச்சின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழுந்து, பயறு, இஞ்சி உற்பத்தியை மேம்படுத்தி மனைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.