தமிழ் – முஸ்லிம் எல்லை பிரச்சினையால் முஸ்லிம் காங்கிரஸ் – பிள்ளையான் தர்க்கம்!

114004618 pillayan01
114004618 pillayan01

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாக கட்டமைப்பில் கோரளைப்பற்று மத்தி, பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுகளில் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகள் விஸ்தீரணங்களில் திட்டமிட்ட முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. நஸிர் அஹமட்டினால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையின் போது  ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியுமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் (பிள்ளையான்) தர்க்கம் ஏற்பட்டது.

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் என்பன தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் ஹரிஸ் எம்.பி. ஆகியோரும் உரையாற்றியிருந்தனர். 

திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களின் காணிகள், நிலங்கள், ஆளுகை எல்லைகள் கபளீகரம் செய்யப்படுவதாக இவர்கள் சபையில் சுட்டிக்காட்டியதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர்களாக  இருந்தவர்கள் மீதும் மாவட்ட செயலகம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்த பிரேரணை மீது விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  உரையாற்றும்போதே  தர்க்கம் ஏற்பட்டது. 

சந்திரகாந்தன் எம்.பி. பேசுகையில், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் வாழைச்சேனை தொடர்பில் கொண்டு வந்த பிரேரணை அப்பட்டமாக இனவாத ரீதியானது. 

இந்த பிரேரணையை கொண்டு வந்த எம்.பி.க்கள் எவரும் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் அல்ல. நான் அங்கு பிறந்து வளர்ந்து அரசியல் செய்பவன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல எல்லைப்பிரச்சினைகள் உள்ளன. இங்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு யானைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள், மாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள், 500 க்கும் அதிகமான குளங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள், காடுகள், மலைகள், எல்லாவற்றையும் சேர்த்து தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் போல் கூறுகிறார்கள். இதனை நீண்டகால அரசியல் பாரம்பரியம் கொண்ட ரவூப் ஹக்கீமும் குறிப்பிட்டது வேதனையளிக்கின்றது.

அங்குள்ள பிரச்சினையை  நிர்வாக ரீதியான பிரச்சினையாக பார்க்கப்பட்டு தீர்க்கப்படவேண்டும். குறிப்பாக எமது வாழைச்சேனையில் என்னுடைய பகுதியில் நகரங்களே  இல்லாமல் போய்விட்டன. நீங்கள் சொன்ன ஓட்டமாவடி பிரதேச சபை தமிழர்களின் புதைகுழி மேல் தான் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சந்தைக்கட்டிடம் ஒரு இந்து ஆலயத்தை இடித்தே அமைக்கப்பட்டுள்ளது. இப்படி பல விடயங்கள் உள்ளன.

இது தொடர்பில் பேசினால் முரண்பாடுகளையே  வளர்த்து கொள்ள முடியும். இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் மட்டக்களப்பில் உள்ள கேபிசி மத்தியையும் கே.பி.சி மேற்கையும் சேர்த்து முஸ்லிம்கள் ஒரு பிரதேசமாக உருவாக்கினால் எல்லாப்பிரச்சினைக்கும் முடிவுக்கு வரும் என்பதே எமது  நிலைப்பாடு. 

நீங்கள் இங்கு குறிப்பிட்ட  அறிக்கை மிகப்பிழையான அறிக்கை. நீங்கள் அரசியலில் மிகப்பலமாக இருந்த போது விடுதலைப்புலிகளின் போராட்டம் கடுமையாக இருந்தபோது மிக மோசமாக உங்கள் அரசியல் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை. வாகரைப்பிரதேசம் வரலாற்று ரீதியாக தனியான பிரதேசம். 

அங்குள்ள மாங்கேணி தெற்கு, புனானை கிழக்கை எப்படி உங்களின் மத்தியுடன் இணைக்க முடியும்? சாத்தியம் இல்லாத விடயங்களைக்கொண்டு வந்து பழைய ஆணைக்குழு அறிக்கைகளை நீங்கள் இங்கு முற்படுத்தாமல் இப்போது அரசு கொண்டுவந்துள்ள ஆணைக்குழுவில் முற்படுத்தி நிர்வாக ரீதியான பிரச்சினைகளை சரியாக செய்ய வேண்டும்.

குறிப்பாக இலங்கையில் எங்கும் இல்லாத பிரச்சினையாக  அளவுக்கதிகமான கிராமசேவகர் பிரிவுகள் எந்தவித வர்த்தமானி அறிவித்தல்களும்  இல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளன. வாழைச்சேனை தமிழ் கிராமம். எமது நகரங்கள் அழிக்கப்படாமல் பாரம்பரிய வைத்தியசாலைகள் இல்லாமல் ஆக்கப்படாமல் தேவநாயகம் காலப்பகுதியில் செய்யப்பட்ட சில விடயங்கள் முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தது என்பதற்காக வரலாற்றில் அதனை நீங்கள் காட்ட முற்படக்கூடாது. 

நியாயமானவற்றை நியாயமாக கேட்டால் மட்டுமே அங்கு இன ஐக்கியம் ஏற்படும் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதன்போது இடையில் எழுந்த நசீர் எம்.பி. நானும் மட்டக்களப்பை சேர்ந்தவன் தான் எனக்கூறி மேலும் ஏதோ  கூற முற்பட சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் அதற்கு இடமளிக்க வில்லை. 

இதேபோன்று ஹரீஸ்,ஹக்கீம் எம்.பி.க்களும் இடையிடையில் சில கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருந்தனர். இறுதியில் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவின் ஊடாக தீர்வை காணமுடியும் என்றார்.