நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு எங்கிருந்து டொலர் வருகிறது? – ராஜித

rajitha sena
rajitha sena

மருந்துப்பொருட்கள் உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் கைவசமில்லை என்று கூறுகின்ற அரசாங்கம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘கழிவு’ உரத்திற்காக 6.7 மில்லியன் டொலரைச் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றது. 

அதுமாத்திரமன்றி சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப்பயணம் செல்வதற்குத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

அவர்களுக்கு மாத்திரம் டொலர் எங்கிருந்து வருகின்றது? முக்கியஸ்தர்களுக்கு டொலர் வழங்குவதற்கென ஏதேனும் விசேட வங்கிகள் இருக்கின்றனவா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். 

அதுமாத்திரமன்றி தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நாட்டிலுள்ள பெறுமதிவாய்ந்த 50 இடங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. 

அதன் ஓரங்கமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் நோக்கில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கக்கூடிய மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா வைரஸ் பரவலே காரணம் என்று ஆளுந்தரப்பினர் கூறுகின்றார்கள். கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி சுமார் 12 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. 

இருப்பினும் தெற்காசியப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் நாணயங்களின் டொலருக்கு எதிரான பெறுமதி முறையே 8, 0.44, 2.8, 2.23, 2.3, 3.3 சதவீதத்தினாலேயே வீழ்ச்சி கண்டிருக்கின்றன. 

அதேபோன்று இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவலினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் வெளிநாட்டுக்கையிருப்பு கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவினால் அதிகரித்திருக்கின்றது. 

இருப்பினும் எமது நாட்டைப் பொறுத்தவரையில், 7.2 மில்லியன் டொலராகக் காணப்பட்ட வெளிநாட்டு இருப்பு தற்போது ஒரு பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனை ஈடுசெய்வதற்காக ஏற்கனவே நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருக்கக்கூடிய அபிவிருத்தி செயற்திட்டங்களை இடைநிறுத்துதல், அரசசேவைக்கு புதியவர்களை ஆட்சேர்ப்புச்செய்வதை நிறுத்துதல் உள்ளடங்கலாக அரசாங்கம் வேறு பல வழிமுறைகளைக் கையாள்கின்றது. 

குறிப்பாக எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக 500 மில்லியன் டொலர்களை மீளச்செலுத்தவேண்டியுள்ள நிலையில், அதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்காக பரஸ்பர பரிமாற்றல் வசதியின்கீழ் இந்தியாவிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நாட்டிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த 50 இடங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அதன் ஓரங்கமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் நோக்கில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன. 

இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள இடங்களில் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையிலுள்ள விமானப்படைக்குச் சொந்தமான இடம், நாரஹென்பிட்டி, உருகொடவத்த, தும்முல்ல உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள இடங்கள், மக்கள் வங்கிக்குச் சொந்தமான இடம், சதொச களஞ்சியசாலை இடம், வெளிவிவகார அமைச்சு கட்டடம், கிரான் ஒரியென்டல் ஹோட்டல், கபூர் கட்டடம், ஹில்டன் ஹோட்டல் ஆகியவையும் உள்ளடங்குகின்றன. 

அதுமாத்திரமன்றி காலி, மாத்தறை, கண்டி, குருணாகல், யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பெறுமதிவாய்ந்த இடங்களும் சீனா, டுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, மலேசியா, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கும் இலங்கையைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும் ஏற்கனவே சுமார் 52 வகையான மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. மேற்படி 52 வகையான மருந்துகளில் உயிர்க்காப்பு மருந்து உள்ளிட்ட 32 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் உள்ளடங்குகின்றன. உதாரணமாக பாம்பு தீண்டிய ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவுடன் அவருக்கு உடனடியாக வழங்கப்படவேண்டிய மருந்து இப்போது நாட்டில் இல்லை. அதேபோன்று உணவுப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. 

அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் மாத்திரமன்றி, விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கைகளின் விளைச்சல் வீழ்ச்சிகண்டிருப்பதனால் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. நாட்டின் நிலைவரம் இவ்வாறிருக்கையில் சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப்பயணம் செல்வதற்குத் தயாராகி வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு மாத்திரம் டொலர் எங்கிருந்து வருகின்றது? முக்கியஸ்தர்களுக்கு டொலர் வழங்குவதற்கென ஏதேனும் விசேட வங்கிகள் இருக்கின்றனவா? அதேபோன்று மக்களுக்கு அவசியமான உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லை என்று கூறுகின்ற அரசாங்கம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, ஆனால் நாம் ஏற்றுக்கொள்ளாத ‘கழிவு’ உரத்திற்காக 6.7 மில்லியன் டொலரைச் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றது. 

உண்மையில் அந்த உரத்திற்கான கொள்வனவுக் கோரிக்கையை முன்வைத்த அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரிடமிருந்துதான் அதற்குரிய நிதி அறவிடப்படவேண்டும். எவ்வித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமின்றி அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதுடன் மாத்திரமன்றி, தேயிலை போன்ற ஏற்றுமதிப்பயிர்கள் மூலம் நாட்டிற்குக் கிடைக்கப்பெறக்கூடிய வருமானமும் வீழ்ச்சிகண்டிருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.