தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் கீழ் மற்றுமொரு ஆவணம் – மனோ

Mano 01
Mano 01

எமது நாட்டில் தமிழ்பேசும் மக்கள் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, தேசிய பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். 

அதன்படி வடக்கு, கிழக்கு, தெற்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய 12 பேர் இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடி, சிங்களவர்களுடன் இணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஆவணமொன்றைத் தொகுக்க முற்படுபவதாக தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரின் பின்னரும் சிறுபான்மையினர் மொழிப்பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். 

காவல் நிலையம், நீதிமன்றம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது அங்கு பெரும்பாலும் தமிழ்மொழி மூலமான சேவைகளை எம்மால் பெற்றுக்கொள்ளமுடிவதில்லை. 

சிறுபான்மையினத் தமிழ்மக்களின் பிரதிநிதி என்றவகையில் பொலிஸ் நிலையத்திற்குச்சென்று, ஓர் அறிக்கையைத் தமிழ்மொழியில் பெற்றுக்கொள்ளவேண்டுமானால், அதற்காகப் பல மணிநேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.

அதேபோன்று சிறுபான்மையின மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி காணி தொடர்பான பிரச்சினையாகும். 

அத்தோடு வேலைவாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகச் செல்லும்போது, அங்கு சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுவதும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருப்பதும் முக்கிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது இலங்கை ஸ்திரதன்மையற்ற நாடாக மாறிவருகின்றது. இதனைக் கூறுவது வெட்கத்திற்குரிய விடயம் என்றாலும்கூட, இதுவே இன்றைய யதார்த்தமாக இருக்கின்றது. 

எதுஎவ்வாறிருப்பினும் நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமையே இத்தகைய ஸ்திரமற்றநிலை உருவாவதற்கான அடிப்படைக்காரணமாகும்.  

பொறுப்புள்ள இலங்கையர் என்ற வகையிலும் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியிலும் ஒரு விடயத்தை வலியுறுத்த விரும்புகின்றேன். 

வடக்கு, கிழக்கு, தெற்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய 12 பேர் இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடவுள்ளனர். 

அதனூடாக சிங்கள சகோதர, சகோதரிகளுடன் இணைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஆவணமொன்றைத் தொகுக்க முற்படுகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளை சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாகத் தேசிய பாதுகாப்பைப் பயன்படுத்துவது முக்கியமானதொரு பிரச்சினையாகும். உள்நாட்டுப்போரின்போது அந்தக் கருவி தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. 

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்குப் பின்னர் அது முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. 

அதன் விளைவாக சிறுபான்மையின மக்கள் நாளாந்தம் அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர் என்று சட்டத்தரணியும் சமூகசெயற்பாட்டளருமான ஸ்வஸ்திகா அருலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.