மக்களின் கோரிக்கையை புரிந்து கொண்டு பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்க வேண்டும்: மாவை

IMG 20220228 131439
IMG 20220228 131439

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்துகிறார்கள். இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்க வேண்டும் என கோருகின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. பல ஆயிரக்கணக்கானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 400 இற்கு மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் சிறைகளில் இருப்பதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய அடித்தளத்தில் இருந்து வேலை செய்கின்ற ஏனைய கட்சிகள், தொண்டர்கள், முன்னாள் ஜனாதிபதி, மதத்தலைவர்கள் என பலர் பல மாவட்டங்களில் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என குரல் கொடுத்து அதற்கு எதிரான கடிதத்திலும் கையொப்பமிட்டுள்ளார்கள். அதற்கான வேலைகள் எமது கட்சியினர், கட்சியின் வாலிபர் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை தங்களுடைய பௌத்த சிங்கள ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு பயன்படுத்துவார்கள். இந்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோத, இனப்பிரச்சனை தீர்க்கப்படாத விடயங்களுக்கு எதிராக நாங்கள குரல் கொடுகின்ற போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி இந்த போராட்டங்களை ஜனநாயக விரோத அடைப்படையில் அடக்கி ஒடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எமது போராட்டம் மார்ச் மாதம் முழுமையாக நடைபெறும். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒண்றிணைந்து இந்த சட்டத்தை நீக்க வலியுறுத்துகிறார்கள். இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்க வேண்டும் என கோருகின்றோம் எனத் தெரிவித்தார்.