சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து கூட்டமைப்பு விரைவில் முடிவெடுக்கும் – சம்பந்தன்

sampanthar 2
sampanthar 2

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரபல செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பைக் கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி சர்வகட்சி அரசாங்கத்தை ஆதரிக்கவிருப்பதாக இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் இது கட்சியின் ஏனைய தரப்புடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இல்லை என்று கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்திருந்தன.

இதுதொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், சர்வகட்சி தேசிய வேலைத்திட்டம் ஒன்றுக்கு ஆதரவளிப்பதாகவே இரா.சம்பந்தன் அறிவித்தார் என்று விளக்கமளித்திருந்தார்.

இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது, விரைவில் கூட்டமைப்பினர் ஒன்று கூடி இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கம் ஒரு வழிமுறையாகும். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க தயாராக இருக்கிறது.

ஆனால் எந்த வகையிலான ஆதரவினை வழங்குவது என்பது கட்சியாகவே தீர்மானிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.