ஊரடங்கை நீடிப்பது குறித்து திங்கட்கிழமை தீர்மானம்!– தமிழக முதல்வர்

பழனிசாமி 1
பழனிசாமி 1

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பது குறித்து திங்கட்கிழமைக்கு பிறகே தெரியவரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “வல்லரசு நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாத சூழலில்,  தமிழகத்தில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

இந்த நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015ல் நடத்தினார்.  அதில் சுமார் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தார்.

தமிழக அரசு 3 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இன்றைக்கு முதலீட்டை ஈர்த்து  சுமார் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு  அந்தப் பணிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரினோம். கோரிக்கையின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.