மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருமாறு பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்

44444 1
44444 1

தங்களுடைய மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் அப்பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் தலைமையில் கிரான் றெஜி மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் கலந்து கொண்டு உரையாற்ற முற்பட்ட போது மேற்படி கோரிக்கையை முன்வைத்து பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ” அரசாங்க உயரதிகாரிகள், அரசியல் வாதிகளின் வாக்குறுதிகளால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் இனியும் ஏமாற மாட்டோம்” என்ற பதாதையையும் ஏனைய சில பதாதைகளையும் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நிலவரத்தை அறிந்த கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் பண்ணையாளர்களின் எதிர்ப்பை ஏற்றுக்கொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார்.

தாம் தொடர்ச்சியாக இந்த விடயம் தொடர்பான நடவடிக்கையில் இப்பிரச்சினையை உடனடியாக தீர்க்க முடியாமல் உள்ளதுடன், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறிது காலம் தேவை ஆகும் என தெரிவித்தார்.

இதன் பின்னர் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வேளையில், பாரம்பரிய மேய்ச்சல் தரையாகப் பாவிக்கப்பட்டு வந்த பிரதேசமானது, இப்போது பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை, குறித்த மேய்ச்சல் தரையில் நுழையும் தங்களுடைய கால்நடைகள் அவர்களால் கொல்லப்படுவதும் அதே நேரத்தில் கட்டப்பட்டு தண்டப்பணம் கோருவதும் இடம்பெற்று வருகின்றது.

இதன் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதுடன், பாரிய நட்டமும் ஏற்பட்டுள்ளதாக மாதவணை, மயிலத்தமடு பிரதேசங்களில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் தெரிவித்ததுடன், இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.