நாட்டில் 21 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 459 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 20,967 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா நோயாளர்களுள் 458 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் கண்டுபிடிக்கப்பட்டவர்கள்.

ஏனைய ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துருக்கிய ஏயர்லைன்ஸ் விமான உதவியாளர் ஆவார்.

இதேவேளை நேற்யை தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 465 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் குணமடைந்த மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 14,962 ஆக உயர்வடைந்தது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 56 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 5,911 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 601 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 94 ஆக பதிவாகியுள்ளது.