தமிழ் தேசியத்தின் வெற்றிக்காக தோற்கடிக்க வேண்டிய பத்து நபர்கள்!

IMG 20200802 WA0005
IMG 20200802 WA0005

இன அழிப்புப் போரையும் ஒடுக்குமுறை அரசியலின் கோரத்தையும் நன்கு அறிந்த எமது மக்களுக்கு அரசியல் குறித்து அதிகம் புகட்டத் தேவையில்லை. இதனால் தமிழ் மக்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் இழைத்து வரும் அரசியல் கட்சிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன. அத்துடன் விடுதலைப் போராட்டம் மற்றும் அதன் தலைமையை கொச்சைப்படுத்தி அரசியல் செய்கின்ற நபர்களும் பெரும் பீதிக்குள் தள்ளுண்டுள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் சிங்களத்திற்கும் உலகத்திற்கும் மாத்திரமல்ல, எமது தலைமைகளுக்கும் புதிய சேதிகளை சொல்ல இருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆசிரியர் தலையங்கள் ஊடாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் யார் யார் வெல்ல வேண்டும் என்பதை குறித்து கட்சி கடந்தும் விருப்பு வெறுப்பு கடந்தும் இரு பட்டியல்களை இட்டுள்ளோம். உலகின் சிறந்த மனிதர்களை தெரிவு செய்யும் அளவீடு என்பது பெரும் சிக்கலானதாக இருக்கலாம். ஆனால் உலகின் கொடிய மனிதர்களையும் வரலாற்றின் கொடிய மனிதர்களையும் இனம் காண்பது எளிதுதான். கடந்த பத்தாண்டுகளாக ஈழத் தமிழ் மக்களுக்கு எளிய துரோகங்களை இழைத்தவர்களை இந்த தலையங்கத்தின் வாயிலாக பட்டியலிட முனைகின்றோம்.

இந்த டொப் டென் நபர்கள் தமிழ் அரசியலை விட்டு அகற்றப்பட வேண்டியவர்கள். இனத்தின் நலத்திற்காகவும் மண்ணின் விடுதலைக்காகவும் கடந்த கால மகத்துவங்களின் நியாயங்களுக்காகவும் இந்தப் பத்து நபர்களை அரசியலில் இருந்து அகற்றி நாம் முன்னர் குறிப்பிட்ட நபர்களை பிரதியீடு செய்வது ஈழத் தமிழ் அரசியலை ஆரோக்கியப்படுத்தும். இதோ அந்த பத்து நபர்கள். தமிழ் அரசியலலிருந்து அகற்ற வேண்டிய டொப் டென் நபர்கள்.

01. எஸ். சிறீதரன் – எம்.ஏ. சுமந்திரன் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் சிறீதரன் மற்றும் சுமந்திரன் அண்மைய காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமக்கும் எதிராக செய்து வருகின்ற அரசியலையும் கட்டுக் கதைகளையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள். சுமந்திரன் தலைவர் பிரபாகரன் குறித்து அவமதிப்பு செய்கிற வகையில் பேசினார் என்றால் சிறீதரன் அதைத்தாண்டி ஒரு படி சென்று பொய்களைக்கூய வரலாற்றை பிழையாக காட்ட முயன்றுள்ளார். இவர்கள் இருவரும் தமிழ் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள். திரைப்படங்களில் வருகின்ற அரசியல் வில்லன்களாகவே இவர்கள் உருவெடுத்துள்ளனர். இவர்கள் வென்றால் தமிழ் தேசியம் முற்றாக வீழ்ச்சியுறும். விடுதலைப் போராட்டத்தின் புனிதங்களை இவர்கள் அழித்து அரசியல் செய்து அதனை பதவியாகவும் பணமாகவும் மாற்றுவார்கள்.

02. டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சி

காலம் காலமாக துரோகம் இழைத்து வருகின்ற டக்ளஸ் தேவானந்தா தமிழினத்திற்கு  எதிராக மேற்கொண்ட காட்டிக் கொடுப்புக்களும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிராக புரிந்த வன்முறைகளும் கொஞ்சநஞ்சமல்ல. யாழ்ப்பாணத்தை ஒரு இரத்த நகரமாக மாற்றவும் முள்ளிவாய்க்கால் முதலாதன இனப்படுகொலைகளுக்கும் சிங்கள அரசுக்கு துணை நின்ற இவர் அரசியலை விட்டு அகற்றப்பட வேண்டியவர். இவருக்கு ஒரு வாக்கினைக்கூட மக்கள் செலுத்தக் கூடாது. இவருக்கு வாக்களித்தால் அது தமிழ் இனப்படுகொலையாளர்களுக்கு அளித்த வாக்குகள் ஆகும்.

03. முருகேசு சந்திரகுமார், சமத்துவக் கட்சி

இன்னொரு டக்ளஸ் என அழைக்கப்படும் சந்திரகுமார், கிளிநொச்சியை சாதியையும் பிரதேசவாத்தையும் தூண்டி துண்டாட முற்படுகின்ற நபர். வன்முறையிலும் துரோகத்திலும் சிறீதரனுக்கு எந்த வித்திலும் குறைச்சல்லவர். அண்மைய நாட்களில் கிளிநொச்சியில் இவரது அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைத்து அரசுக்கு துணைபோதல், ஐ.நாவின் தமிழர் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்தல் என இவரது துரோகங்கள் நீண்ட பட்டியலைக் கொண்டது. வீரத்திற்கும் தியாகத்திற்கும் பெயர் பெற்ற கிளிநொச்சி மண்ணில் மக்கள் இவரை தோற்கடிப்பது கால அவசியமாகும்.

04. இரா. சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

சிறீதரன்கள், சுமந்திரன்களை உருவாக்கும் சம்பந்தன், தமிழ் அரசியலில் கையாலாகத்தனமான நபர். ஒரு அரசியல் தலைவராக இருக்க எந்த விதத்திலும் அருகதையற்றவர். தன் வாழ் நாள் முழுவதும் தோல்வி அரசியல் வரலாற்றைக் கொண்டவர். திருகோணமலை மண் சிங்களமயப்படுத்தப்படவும் இழக்கப்படவும் இவர்தான் காரணம். அங்கு சரியான ஒரு மக்கள் பிரதிநிதி இருந்தால் இந்த நிலை ஏற்படாது. சம்பந்தனை தோற்கடிப்பது தமிழ் அரசியலில் புதிய அரசியல் தலைமை உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

05. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாற்று அணி என்று புறப்பட்ட திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்னொரு சம்பந்தனாக, இன்னொரு சுமந்திரனாக மாறிவிட்டார். பலமான மாற்று அணியை உருவாக்குவதில் பிடிப்பின்றியும் தடையாகவும் இருந்த கஜேந்திரகுமாருக்கு தனது பாட்டினின் கட்சியை காப்பாற்றுவது மாத்திரமே இலட்சியம். அத்துடன் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுக்கும் வகையில் பேச்சுகளை நிகழ்த்தியுள்ளதுடன் ஐ.நா வரை சென்று அதனை செயலிலும் காட்டினார். புலி நீக்க அரசியலை தனது கட்சி நலனுக்காக இவர் முன்னெடுக்கின்றார். ஒரு மக்கள் பிரதிநிதியாக இருக்க எந்த தகைமையுமற்ற இவரை மக்கள் இப்படியே விடுவதே சிறந்தது.

06. செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு பதவிக்காகவும் தன்னலனிற்காகவும் எதையும் செய்யக் கூடியவர் செல்வம் அடைக்கலநாதன். கடந்த காலத்தில் சுமந்திரன் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய சமயத்தில் வாய்மூடி மௌனியாக இருந்த கள்ளதமான அரசியல்வாதி. இவரைப் போன்ற அரசியல்வாதிகளை தமிழ் அரசியலை விட்டு அகற்ற வேண்டும். கொள்கை ஏதுமின்றி முட்டாள்தனமான பயணத்தை மேற்கொண்ட வரும் இவரைப் போன்றவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் காலம் இதுவாகும்.

07. சாணக்கியன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரோகிகளுக்கே அதிக வாய்ப்புக்களை கொடுக்கின்ற கட்சி என்பது வெளிப்படையானது. சாணக்கியன் எனப்படும் இந்த நபர் ஒரு தமிழரல்ல என்றும் சிங்களவர் என்றும் ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஏற்கனவே கிழக்கு மண்ணும் மட்டக்களப்பும் சிங்கள ஆதிக்கால் சூழப்பட்டுள்ள நிலையில் பிறப்பால் சிங்களவரான இவரை வெற்றி பெறச் செய்தால் எமக்கு பெரும் ஆபத்து ஏற்படும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். பியசேன என்ற நம்பர் இம்பாறையில் செய்ததைதான் இவரைப் போன்றவர்கள் எதிர்காலத்தில் செய்வார்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

08. சதாசிவம் வியாழேந்திரன், பொதுஜன பெரமுன

தமிழ் தேசியத்தின் பெயரால் வெற்றி பெற்றுவிட்டு, அந்த மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் முகமாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி ஏற்று வராற்று துரோகத்தை செய்தவர் வியாழேந்திரன். ஈழத் தமிழ் மக்களால் அதனை ஒரபோதும் ஜீரணிக்க முடியாது. இன்று இன அழிப்பாளர்களின் கட்சியில் கிழக்கு மண்ணில் மட்டக்களப்பில் போட்டியிடும் இவருக்கு எமது மக்கள் தக்க பாடத்தை கற்பிக்க தயாராகிவிட்டனர். இவருக்கு ஒரு சில வாக்குகள்கூட விழாது என நோக்கர்கள் கணித்துக் கூறுகின்றனர்.

09. ந. காண்டீபன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

தமிழீழ தேசியத் தலைவரை ஒருமையில் அழைத்த காண்டீபனுக்கு விடுதலைப் போராட்டம் பற்றிய எந்த புரிதலும் இல்லை. அவரால் அதை உணரவும் முடியாது. சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் ஈடாக இவர் தலைவரை கொச்சைப்படுத்திய சம்பவம் மக்கள் நன்கு அறிந்ததுவே. விடுதலைப் புலிகள் இயக்கம் பசிலுடன் டீல் பேசி பணத்தை வாங்கினார்கள் என்றும் ஆதாரமற்ற வகையில் இவர் கூறிய பொய் மக்களை பெரும் சினத்துக்கு உள்ளாக்கியது. இத்தகைய நபர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

10. கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு உண்மையில் அதிக பணிகளும் பொறுப்பும் உண்டு. அந்த மாவட்டத்தை இனத்துடைப்பில் இருந்து பாதுகாக்கக்கூடிய நபராக அவர் இருக்க வேண்டும். கோடீஸ்வரன் தன்னை கோடீஸ்வரன் ஆக்கியதை தவிர எந்த அர்த்தம் தரும், பிரயோசனம் தரும் வேலைகளையும் செய்யவில்லை. அந்த மாவட்டத்தை இனத்துடைப்பிலிருந்து பாதுகாக்க இவரை போன்றவர்கள் தோற்கடித்து, தமிழ் தேசியத்தில் இறுக்கமான பிடிப்புள்ள அம் மாவட்டத்தை நன்கு நேசிக்கக்கூடியவர்கள் வரவேண்டும்.

மேற்குறித்த பத்து நபர்களின் பட்டியலும் அரசியல் கடந்து, கட்சி கடந்து மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை பகிரங்கமாகவும் அதே நேரம் மக்கள் அறிந்த காரணங்களுடனும் முன்வைத்துள்ளோம். தமிழ் மக்கள் இந்த தீர்ப்பை வழங்குவார்களா இருந்தல் அது தமிழ் அரசியலின் பொற்காலமாக அமையும்.

தமிழ்க்குரல் – ஆசிரியர் பீடம்