புலிகளற்ற சூழலில் தமிழரிடம் இன்றுள்ள ஆயுதம் என்ன?

question mark
question mark

இந்து சமுத்திரத்தின் முத்து எனப்படும் இலங்கைத் தீவில், கொடூரமான இனவொடுக்குமுறையால் விளைந்த இனவழிப்புப் போரின் பின்னரும், தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை வழங்கும் தீர்வு ஒன்றினை முன்வைக்க இலங்கை அரசுக்கு மனம் வரவில்லை. உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி, அந்தப் போராட்டத்தின் வழியாக, பிரமிப்புடன் மேம்பட்ட ஒரு தேசம் இன்று, இன அழிப்பு அரசின் ஆளுகைக்குள் நசிக்கப்படுகிறது. தேசக்கனவுடன் வாழும் ஈழத் தமிழ் மக்களின் இழந்த இறைமையை வெல்ல இன்று எம்மிடம் என்னதான் ஆயுதம் இருக்கிறது?

இறைமையற்ற தேசிய இனங்கள், பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி, அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவுக்கு உள்ளாகின்றன. நாடுகள் மற்றும் ஒன்றியத் தோற்றங்களின்போது இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை இழந்த பல தேசங்களும் நாடுகளும் அதனை மீட்கெடுக்க இடையறாத போராட்டங்களை மேற்கொண்டிருப்பது உலக வரலாறு. சுய மரியாதை உள்ள எந்த இனமும் சமுகமும் ஒடுக்குமுறையை பொறுக்காது. அத்தகைய தனித்துவமான ஒரு இனமாக ஈழத்தவர் காணப்படுகின்றனர்.  

ஈழம் என்ற பூர்வீக நாடு

ஈழம் என்பது இன்று நேற்று உருவான பெயரல்ல, அது ஸ்ரீலங்கா என்ற பெயரைப் போல, இந்தியா என்ற பெயரைப் போல சில பத்தாண்டுகளுக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் முன்னும் உருவானதல்ல. ஈழம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இத் தீவை பண்டைய வரலாறு ஈழம் என்றே அழைத்து வந்திருக்கிறது. சங்ககால இலக்கியங்களில் ஈழம் என பட்டினப்பாலை கூறுகின்றது. அதற்குப் பிந்தைய காலத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்களிலும் ஈழம் என்ற பெயர் பதிவாகி இருப்பது முக்கியமான வரலாற்று ஆதாரங்கள் ஆகும்.

ஈழம் என்ற பூர்வீக நாட்டில் சிங்களவர்களும் பௌத்தமும் குடியேற்றம் செய்யப்பட்டமைக்கும் வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ஈழத்தில் தமிழர்களோ, அல்லது சைவ சமயமோ குடியேற்றம் செய்யப்பட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. அத்துடன் ஈழத்தை சிவபூமி என்று திருமூலர் குறிப்பிடுகிறார். திருமூலர் கி.மு. 5ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சித்தர். 63 நாயன்மார்களில் ஒருவர். அது மாத்திரமின்றி சம்பந்தர், சுந்தரர் போன்ற நாயன்மார்கள் ஈழம் பற்றிப் பாடிய தேவாரங்களும் ஈழத்தவரின் தொன்மைக்கு சான்று பகிர்கின்றன. அத்துடன் கி.மு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலயங்களான திருக்கேதீச்சரம்  திருக்கோணேச்சரம் முதலிய முன்மைத்தலங்களுடன் ஈழச் சைவ ஆலயங்களும் ஈழத்தின் பூர்வீகத்தவர்கள், தமிழர்களே என்பதற்கான வரலாற்று சாட்சியங்களாகவே நின்று நிலைத்துள்ளன.

வடக்கு கிழக்கில் தமிழ் அரசுகள்

பிரித்தானியர்கள் இலங்கையைக் கைப்பற்றும் போது, வடக்கில் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணப் பேரரசு புத்தளம் வரையில் நீண்டிருந்தது. இதற்கு கைலாயமால போன்ற யாழ்ப்பாண அரச காலத்து இலக்கியங்கள் முதன்மை ஆதாரங்கள் ஆகும். அது மாத்திரமின்றி கிழக்கிலும் தமிழ் சிற்றரசுகள் காணப்பட்டன. அதற்கு சாட்சியமாகவே திருக்கோணேஸ்வர திருத்தலம் காணப்படுகின்றது. கிழக்கிலுள்ள பல கல்வெட்டுக்களும் அந்நிலப் பூர்வீகத்தை எடுத்துரைக்கின்றன. குறிப்பாக குளக்கோட்டன் என்ற ஈழ மன்னன், கிழக்கை ஆட்சி செய்தான். இவனால் கட்டுவிக்கப்ட்டதே கந்தளாய் குளம். ஆக, வடக்கு கிழக்கில் தமிழ் அரசுகள் காணப்பட்டதை பல்வேறு ஆதாரங்களும் எடுத்துரைக்கின்றன.

1505இல் இலங்கையை போர்த்துக்கீசர் கைப்பற்றினர். அதனை தொடர்ந்து 1656இல் ஒல்லாந்தர் கைப்பற்றினர். 1796இல் இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்தனர். தனித்தனி இராச்சியங்களாக காணப்பட்ட இலங்கைத் தீவின் பகுதிகள் பிரித்தானியரின் ஆட்சியில் ஒரு நாடாக்கப்பட்டது. அங்கேதான் தமிழரசுகள் காணாமல் போயின. பிரித்தானிய அரசில் இலங்கைப் பிரதிநிதியாக சேர் பொன்னம்பலம் இராமநாதன் காணப்பட்டார். ஒன்றுபட்ட சிலோன்நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சேர். பொன்னம்பலம் இராமநாதன் போன்றவர்கள், தமிழர்களுக்கு தனிநாடு ஒன்று தேவை என்பது பற்றி அப்போது சிந்திக்கவில்லை.

தனிச்சிங்களமும் தனி ஈழமும்

இலங்கையில் 1948உடன் பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சிலோன் குடிமக்களுக்கு அன்றைய நான் முதல் சுதந்திரம் கிடைத்தததாக சொல்லப்பட்டபோதும், ஈழத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியின் கீழ் அடிமையாக்கப்பட்ட வரலாறு அன்றுமுதல் துவங்கியது. தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களை இழந்ததை உணர்த் தொடங்கினர். அரசியல், பொருளாதாரம், சமயம், மொழி என பல்வேறு வழிகளிலும் ஒடுக்குமுறையும் புறக்கணிப்பும் தலையெடுக்கத் தொடங்கிற்று.

1956இல் ‘சிங்களம் மட்டுமே’ என்ற பேரினவாதக் கொள்கையாக ‘தனிச்சிங்களச் சட்டத்தை’ பண்டாரநாயக்கா நிறைவேற்றினார். இது தமிழை மிக கடுமையாக புறக்கணித்து ஒடுக்கியது. இனத்தை ஒடுக்க மொழியை ஒடுக்கும் வேலையை சிங்கள அரசு கச்சிதமாக முன்னெடுக்கத் தொடங்கியது. இதனால் பல ஆயிரம் தமிழர்கள் வேலையை இழந்தனர். சிங்கள மொழியின் ஆதிக்கம் தமிழர்களின் கழுத்தை நெறித்தது. இதற்கு எதிராக அன்றைய தமிழ் தலைவர்கள் போராட்டங்களை செய்தனர். தனிச்சிங்களச் சட்டம் தனித் தமிழ் நாட்டுக்கு வழி வகுக்கும் என்று சிங்கள இடதுசாரித் தலைவர்கள் பலரும் எச்சரித்தனர்.

இலங்கை சிக்கலுக்கு என்ன காரணம்?

சிங்களம் மட்டுமே  என்ற சட்டத்தை எதிர்த்து தமிழர்கள் போராடிய சூழலில், 1958 இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. இதில் சுமார் 300 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் தமது இன உரிமைகளை கேட்கும்போதும், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைகளை குறித்து கேள்விகள் எழுப்பும்போதும் ஈழத் தமிழர்களை சிங்கள அரசும் பேரினவாதிகளும் கொத்துக் கொத்தாக படுகொலை செய்தனர். அத்துடன் தெற்கில் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றம் செய்ததுடன், அங்குள்ள தமிழ் மக்களையும் சிங்களவர்களாக்கிய நிலையில், வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை செய்தனர்.

தமிழர்கள் தமது மொழி குறித்தும் தமது இனம் குறித்தும் தமது நிலம் குறித்தும் எந்த உரிமையையும் கேட்கக்கூடாது என்ற அடிடையில் இம் மூன்று அம்சங்கள்மீதும் ஒடுக்குமுறையும் அழிப்பும் அபகரிப்பும் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கில் பல பூர்வீகத் தமிழ் கிராமங்களையும் கையகப்படுத்தி சிங்களக் குடியேற்றம் செய்து, அவற்றை சிங்களமயமாக்கும் வேலைகளில் அரசு ஈடுபட்டது. அத்துடன் அங்கு வாழ்ந்த மக்கள் கொல்லப்பட்டும் விரட்டி அடிக்கப்பட்டும் வந்தனர். சிங்கள இராணுவமும் காவல்துறையும் சிங்களப் பேரினவாதிகளின் அரச எந்திர ஆயுதமாக தமிழ் மக்களை  ஒடுக்கி அழித்தன.

தனித் தமிழீழக் கோரிக்கை

தமிழ் மக்கள்மீது ஒடுக்குமுறைகளை மேற்கொண்டால் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவார்கள் என்பதை குறித்து சிங்களத் தலைவர்கள்தான் அன்றைக்கு எச்சரித்தார்கள். தனிச்சிங்களச் சட்டம் உருவாக்கப்பட்ட சமயத்தில், “உங்களுக்கு இருமொழிகள் – ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி – இரு நாடு வேண்டுமா’ என்று வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா கேள்வி எழுப்பினார்.

அத்துடன் “நீங்கள் தமிழர்களை பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறுத்தினால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும்”என்றும் அவர் எச்சரித்ததுவே பின்நாட்களில் நடக்கத் தொடங்கியது. அதன்படி, 1977இல் தனித் தமிழீழம் அமைக்க வேண்டும் என்ற வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழீழக் கோரிக்கைக்கு அடிப்படைக் காரணம் சிங்களப் பேரினவாதமே. இந்த நிலையில்தான் மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக தனியொருவனாக போராடினான். இறுதியில் சைனைட் அருந்தி வீரமரணம் எய்து ஈழத்தின் முதல் மாவீரன் ஆகினார்.

தமிழீழ நிழல் அரசு

தமிழீழக் கோரிக்கையை உருவாக்கியவர்கள் தமிழ் அரசியல் தலைவர்கள். ஆனாலும் அதற்கு நேர்மையாக அவர்கள் நடந்துகொள்ளவில்லை என்பதும் பின் வந்த துயர வரலாறு. ஆனாலும் தமிழ் ஈழத்தின் இளைய தலைமுறையினர் மத்தியில் சிங்கள அரசின் இனவாத ஒடுக்குமுறைகளும் தமிழீழத்தின் அவசியமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தமது உரிமையை வெல்லுவதற்கு தீர்மானித்தனர். தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் உருவாகியது. இதற்கு மாவீரன் பொன். சிவகுமாரின் தனித மனிதப் போராட்டமும் ஒரு உந்துசக்தியாக இருந்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.

தமிழ் அரச தலைவர்கள் தமிழீழத்திற்கான விசுவாசத்திலிருந்து விலகியதைப் போலவே, அதற்காக ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் சிலவும் விலகியதுடன் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் ஆதரவு அமைப்புக்களாக மாறிவிட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ் மக்களின் கனவை நிறைவேற்றுகின்ற ஏகப் பிரதிநிதி இயக்கமாக உருவெடுத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்களின் பெரும் ஆதரவுடன் தமிழீழ நிழல் அரசையும் அமைத்தனர். ஒழுக்கம், நேர்மை, தலைமைத்திறன் என புலிகள் இயக்கத்தின் பரிமாணம் மிளிர்ந்தது.

இதன்படி உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு கிழக்கின் பெரும்பான்மை பகுதிகளில் புலிகளின் ஆட்சிக்கு உட்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் படைக்கட்டுமானங்களை மாத்திரமின்றி, மக்களுக்கு சேவை வழங்கும் நிழல் அரச அமைப்புக்களையும் உருவாக்கினர். மருத்துவம், நிதி, நிர்வாகம், பொருளாதாரம், சமூகம் என அனைத்துக் கட்டமைப்புக்களையும் தமது ஆட்சிப் பகுதியில் உருவாக்கி, உலகின் முன்னூதாரணமான விடுதலை இயக்கமாக திகழ்ந்ததுடன் தமிழருக்கு பாதுபாப்பான வாழ்க்கையை உருவாக்கினர். அது தமிழீழத்தின் அவசியத்தை இன்னும் பெருக்கியது.

இனவழிப்புப் போர்

வரலாறு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழினப் படுகொலைகளின் உச்சமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடாத்தப்பட்டது. சிங்களம் மட்டுமே, சிங்களவர்கள் மட்டுமே என்ற பேரினவாதக் கொள்கையினை நடைமுறைப்படுத்தும் விதமாக ஒரு இனம்மீது, ஒரு தேசம்மீது இன அழிப்புப் போர் அதிகாரபூர்வமாக நடாத்தப்பட்டது. இலங்கை அரசின் மிகக் கோரமான இந்த யுத்தத்தை தடுக்க முன்வராத சர்வதேச நாடுகள் பலவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே ஆயுத அரசியல் உதவிகளைச் செய்தன. போரை தடுத்து மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய ஐ.நா என்ற பன்னாட்டு அமைப்புக்கூட கைகட்டி வேடிக்கை மாத்திரம் பார்த்தது.

மனித குலம் அஞ்சி நடுக்கும் போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் முள்ளிவாய்க்கால் சந்தித்தது. விடுதலைப் புலிகளை முற்றிலும் அறம் பிழைத்த ஒரு போரினால்தான் சிங்கள அரசு வென்றது. தமிழர்கள் தமது உரிமை குறித்த கோரிக்கையை இனியொருபோதும் எழுப்பக்கூடாது என்பதற்காகவே இப்போர் நிகழ்ந்தது. தமிழர்கள் தம் தனிநாடு குறித்து எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போர் நிகழ்ந்தது. இக் கொடிய போரில் ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் ஆகும்.

புலிகளற்ற பதினொரு ஆண்டுகள்

புலிககளற்ற ஈழ விடுதலைப் போராட்டம் எப்படி சாத்தியமற்றதோ, அவ்வாறே புலிகளற்ற இலங்கையும் சாத்தியமற்றது. இன்றும் புலிகள் இயக்கம் என்ற பெயரை சுற்றியே இலங்கை அரசியல் மாத்திரமல்ல ஈழப் போராட்டமும் நகர்கின்றது. புலிகளை அழித்துவிட்டு தமிழர்களுக்கு தீர்வு கொடுப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியபோதும், போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இன்றுவரையில் எந்தவொரு தீர்வு முயற்சியும் இடம்பெறவில்லை. இனப் படுகொலைக்கான நீதியை வழங்குதிலும் சரி, இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதிலும்சரி இலங்கை எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை.

புலிகளின் கோரிக்கையும் கனவுமே இன்றும் தமிழர்களின் கோரிக்கையும் கனவுமாக இருக்கிறது. புலிகளற்ற இந்தப் பதினொரு ஆண்டில், தமிழ் அரசியல் சூழலில் ஆரோக்கியமான எந்தச் செயற்பாடுகளும் நடக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்துகின்ற சுமந்திரன்களே அறுவடை செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் ரணில் – மைத்திரி அரசில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு குறித்த முயற்சிகளும் கைவிடப்பட்டுள்ளன. தமிழர்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய யாப்பு மாற்றங்களை சிங்கள அரசு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு இல்லை.

தமிழ் அரசியல் தலைவர்களின் மிதவாத செயற்பாடுகளினால் இலங்கை சூழலில் தமிழர்களின் உரிமையை வெல்ல முடியுமா? வெல்ல முடியாது என்பதையே கடந்த கால வரலாறும் புலிகளற்ற பதினொரு ஆண்டுகளும் தெளிவாக உணர்த்துகின்றது. தேர்தலில் சிங்கள தேசிய கட்சிகளுக்கு எதிரான போரை தமிழ் மக்கள் செய்வது தவிர்க்க முடியாது. தமிழ் அரசியல் சூழலில் மாற்றணிகளின் வளர்ச்சி, விவாதங்கள் இன்றைக்கு மிக அவசியம். அதையும் தாண்டி உண்மையில் தமிழர்களின் வசம் இப்போது என்ன ஆயுதம் இருக்கிறது? அப்படி ஏதேனும் இருக்கிறதா? அதை எப்படிப் பிரயோகிப்பது?

தமிழ் மக்களின் வசம் இப்போதும் ஆயுதங்கள் இருக்கின்றன. அவை துப்பாக்கிகளும் பீரங்கிகளுமல்ல. ஆனால் அதையும் தாண்டிய பலமான ஆயுதங்கள். ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட வரலாறு. ஆமாம், வரலாறு பெரும் ஆயுதம்தான். புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பது குறித்து பேசுவதும் அதன் நியாயத்தை சரியான மொழியிலும் சரியான வழியிலும் எடுத்துரைப்பது அவசியமானது. அது ஒரு ஆயுதம்.  விடுதலைப் புலிகள் பற்றிய நினைவுகள் தமிழரின் ஆயுதமாக இருப்பதனால்தான், பேரினவாதிகளும் அரச ஒத்தோடிகளும் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முயல்கின்றனர்.

மற்றைய ஆயுதம், ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த இனப்படுகொலை. தமிழர்கள்மீது ஏன் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது? என்பது தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை என்ன நடந்தது என்பது வரையான இனப்படுகொலை குறித்த சரித்திரம் எமக்கு மற்றொரு ஆயுதம். நடந்த இனப்படுகொலைக்கு தீர்வு இல்லாமல் ஈழத் தமிழினம் நிம்மதியாக எதிர்காலத்தில் வாழ முடியாது. நடந்த இனப்படுகொலைக்கு நீதிதான் ஈழத் தமிழினத்தின் காயத்தை ஆற்றும். ஈழத்தில் மாத்திரமல்ல, உலகின் எந்த மூலையிலும் இன்னொரு இனப்படுகொலை நடவாதிருக்க ஈழ இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். இனப்படுகொலையின் நீதியில்தான் தமிழர்களுக்கான தீர்வும் தங்கியிருக்கிறது. அத்துடன் இலங்கைத் தீவின் அமைதியும் விடிவும் தங்கியிருக்கிறது.

பா. பிரதீபன்

(பொன்.சிவகுமாரன் ஞாபகார்த்தமாக,  ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை எட்டுதல் என்ற கருப்பொருளில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற கட்டுரை)