கிரிக்கட் ஆடுவதும் ஆயுதப் போராட்டமும் ராஜதந்திரமா?

cricket aayutham
cricket aayutham

நான் கிரிக்கெட் ஆடியமை ராஜதந்திரம்’ – சுமந்திரன்

எமது ஆயுத போராட்டம் ராஜதந்திரம்’ – ஜனநாயகப் போராளிகள்

தமிழர் அரசியலில் ராஜதந்திரம் என்பதற்கான விளக்கங்கள் தலையைச் சுற்ற வைக்கின்றன. ராஜதந்திரத்தின் குருவான சாணக்கியன் இன்று உயிருடன் இருந்திருந்தால் ஓட்டைச் சிரட்டைக்குள் தண்ணீர் விட்டு அதற்குள் குதித்து உயிரை மாய்த்திருப்பார்.

ஒரு பிள்ளை பிறந்ததில் இருந்தே வாய்பேசாமிலிருந்தது. நீண்டகாலம் தவமிருந்து பெற்ற இந்தப் பிள்ளையின் வாயிலிருந்து என்றாவது ஒருநாள் அம்மா என்ற வார்த்தை வராதா என ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தாள் அன்னை. மீண்டும் ஆலயங்கள், தல விருட்சங்கள் எல்லாவற்றையும் சுற்றி வந்தாள். யார் யாரோ சொன்ன விரதங்கள் எல்லாவற்றையும் அனுஷ்டித்தாள். நம்பிக்கையை மட்டும் அவள் கைவிடவில்லை.

ஒருநாள் காலை “அம்மா” என்ற குரல் கேட்டது. அந்தச் சொல் அவளுக்குத் தேனாக இனித்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். கனவல்ல நிஜம் என்பதைப் புரிந்துகொண்டாள். ஓடிப் போய் பிள்ளையை வாரியணைக்கத் துடித்தாள். தொடர்ந்தும் பிள்ளை பேசியது, “அம்மா நீ எப்போது தாலியறுப்பாய்?”, இந்தக் கேள்வியைக் கேட்டதும் இடி விழுந்தது போலாகிவிட்டது.

கடவுளே! இதனைக் கேட்பதை விட இந்தப் பிள்ளை ஊமையாகவே இருந்திருந்தால் சஞ்சலமில்லாமல் இருந்திருப்பேனே என எண்ணினாள். இதனைப் போல ஒரு காட்சியை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானத்தின் தனிப்பட்ட அரசியல் அலுவலகத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கேட்கக்கூடியதாக இருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரனோ அவரின் தத்துவாசிரியரோ, திலீபனோ, தமிழ்ச்செல்வனோ, மாவட்டத் தளபதிகளோ பொறுப்பாளர்களோ மாவீரர் நாள் நினைவுகளிலோ – ஊடகவியலாளர் சந்திப்புக்களிலோ இதுவரை வெளியிட்டிருக்காத ‘அரிய உண்மை’ என்று தான் கருதிய ஒன்றை அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார் ஜனநாயகப் போராளிகளின் கதிர். “நாம் ஆயுதம் ஏந்தியது அரசியல் தந்திரோபாயமே”.

இதனை வாசித்த முன்னாள் போராளிகள் ஊமைப் பிள்ளை பேசாதா எனக் காத்திருந்து விட்டு பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட அன்னையின் நிலையில் இருந்தனர். “இவங்களில் ஏதோ விஷயம் இருக்குது” என மனதில் நினைத்த பலரும் இடிந்து போய் நிற்கின்றனர்.

“நான் அரசுத் தரப்பினருடன் கிரிக்கெட் விளையாடியது எனது ராஜதந்திரமே” என மகசின் ஜி.எச். வார்ட்டில் கைதிகளின் காதில் பூச்சுற்ற முனைந்த சுமந்திரன் சொன்னது போலவே ஜனநாயகப் போராளிகளின் பிரமுகர் கதிரின் விளக்கமும் அமைந்திருந்தது. “தமிழரசுக் கட்சியிலுள்ள சுமந்திரனுடன்கூட எமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை. நாம் பங்காளிக் கட்சிகளாக இருந்ததில்லை. ஆனால், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பக்கபலமாக இருப்போம்” எனவும் அவர் மொழிந்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே”, எனவும் அவர் நினைவுபடுத்தினார்.

இந்த விடயத்தைத் தமிழ் மக்கள் மறக்கவில்லை. அதுமட்டுமல்ல, சுயேச்சைக் குழுவாக ஜனநாயகப் பேராளிகள் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதையும் மறக்கவில்லை. நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்ததும், “சம்பந்தன் ஐயா கடலைக் கடை நடத்தத்தான் லாயக்கானவர்” என இக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டார். கூடவே இக்குழுவை ஒருங்கிணைத்தவரும், அதன் அப்போதைய தத்துவாசிரியர் போன்ற நிலையில் விளங்கியவருமான வித்தியாதரனும் நின்றிருந்தார். இக்காட்சியினை தொலைக்காட்சியொன்று ஒளிபரப்பியது. அப்போது அவரும் இதேநிலைப்பாட்டிலேயே இருந்திருக்க வேண்டும். இல்லையேல் இக்கருத்தைத் திருத்த முனைந்திருப்பார் அல்லது வருத்தம் தெரிவித்திருப்பார். எவ்வாறிருந்தாலும் தமிழ் மக்களின் மறதி மீது தாங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு இச்சம்பவங்கள் நல்ல உதாரணங்களாகும். சரி இக்குழுவினர் கடலைக் கடையில் வறுவல் வேலை செய்யப் போகிறார்களா?

முன்னாள் போராளிகள் நாடாளுமன்றப் படிகளில் மிதிக்கத் தகுதியில்லாதவர்கள் என்ற நிலைப்பாட்டை 2009 இலிருந்து கூட்டமைப்பினர் செயலில் நிரூபிக்கின்றனர். அவர்களுக்கு உரிய இடம் சிறைதான் என்பதைத் தமது செயல் மூலம் உணர்த்துகின்றனர். தற்போது, ஈ. பி. டி. பியைச் சேர்ந்த மு.றெமீடியஸ், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோய் மகாதேவன் ஆகியோரால் சில போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியிலுள்ள தவராசாவின் முயற்சியினாலும் சில போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கைதிகள் விவகாரத்தைப் பொறுப்பேற்ற சுமந்திரனால் மட்டும் எந்த ஒரு முன்னாள் போராளியையும் இதுவரை விடுவிக்க முடியவில்லையே. “நான் கோட்டாபயவுடன் டின்னரில் கலந்து கொள்வதுண்டு. உங்களது விடுதலையை சாத்தியமாக்கிக் காட்டுவேன்”, எனச் சூளுரைத்த சுமந்திரனால் மட்டும் எதுவும் சாத்தியமாகவில்லை என்பதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால், இவரது பெயரால் சுமார் 15 பேர் சிறைவாசிகளாகியுள்ளனர். ஜே.வி.பியினர் விடயத்தில் சுமந்திரனால் சாத்தியமாகக் கூடிய விடயங்கள் புலிகள் விடயத்தில் மட்டும் பலிக்கவில்லை போலவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் போட்டியிட வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் வலியுறுத்தவில்லை. தாங்கள் செருப்புப் போன்றவர்கள் நாடாளுமன்றம் என்ன பூசையறைக்குள் போகத் தகுதியில்லாதவர்கள் வெளியே நிற்கத்தான் முடியும் எனக் கருதுகிறார்கள் போல. நாம் அறிந்த வரையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் அனைவரும் புனர்வாழ்வு பெற்றவர்களே. எவரும் வழக்கை எதிர்கொண்டு விடுதலையாகவில்லை. ஆகையால், இவர்களுக்கு சில விடயங்கள் விளங்கவில்லைப் போல் உள்ளது. இவர்களுக்கு நெருக்கமான சுமந்திரனுக்கும் விளங்கவில்லை. அதனால்தான், “எமது குடும்பத்தினர் வறுமையில் வாடுகின்றனர். எம்மைப் பார்க்க வரக்கூட அவர்களால் முடியவில்லை. புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகளுடன் தொடர்பு கொண்டு எமது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்யுங்களேன்”, என சுமந்திரனிடம் கெஞ்சினர் கைதிகள்.

அவரோ “முன்னர் புலிகள் இருந்தனர். கேட்டவுடன் பணம் கிடைக்கலாம். எமது கட்சியிலும் நிதியில்லை. தேர்தல் செலவுக்குக்கூடப் பணம் இல்லாமல் சிரமப்பட்டோம்” என அழாத குறையாகக் கூறினார். இதே காலப்பகுதியில்தான் கட்சிக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கினேன் என்று பின்னாளில் வீரகேசரிக்கு அளித்த நேர்காணலை நாம் மறந்து விடுவோம்.

எவ்வாறிருந்தாலும் முன்னாள் போராளிகளை சிறையிலிருந்து மீட்டவர் என்ற வரலாறு சட்டத்தரணி தவராசாவுக்கு உண்டு. அவருக்கு முன்னாள் போராளிகள் நன்றிக் கடன்பட்டவர்கள். இதிலிருந்து ஜனநாயகப் போராளிகளும் விலகியிருக்க முடியாது. ஆகவே கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் முதல் இடம் தவராசாவுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இக்கட்சியினர் எடுக்க வேண்டும். கூட்டமைப்புத் தலைமையிடம் இதனை வலியுறுத்த வேண்டும். கனடா வரவு குகதாசனுக்கும் சுமந்திரனுக்கு வேண்டப்பட்ட அம்பிகாவுக்கும் பின்னர்தான் தவராசாவின் பெயர் பற்றி சிந்திக்கப்படும் என்ற நிலைப்பாட்டை மாற்றவும் தாங்கள் செல்லாக் காசுகளல்ல என்பதை நிரூபிக்கவும் ஜனநாயகப் போராளிகள் முயல்வார்களா?

இன்னொரு விடயம் கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் பெற்றோரிடம் உங்கள் பிள்ளை எமது ராஜதந்திரப் பேராட்டத்தில் பலியானார் என்று மறந்தும் சொல்லிவிடக்கூடாது.

மட்டுநேசன்