இப்போது இலங்கைத் தீவில் இரண்டு நபர்களைப் பற்றிய பேச்சுக்கள்தான் அடிபடுகின்றன. அந்த இரண்டு நபர்களும் விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கும் இழைக்கும் துரோகங்களைப் பற்றித்தான் அனைவரும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் அமைச்சர் கருணா. மற்றையவர் முன்னாள் எம்.பி சிறீதரன்.
துரோகம் என்பது நம்பிக்கைக்கு மாறாக செயற்படுவது, நம்பியவர்களின் கழுத்தை அறுப்பது. துரோகத்திலும் பெரிய துரோகம் என்னவென்றால், ஒரு சமூகத்திற்கும் இனத்திற்கும் செய்யும் துரோகம்தான். அது ஒரு சமூகத்தை குழி தோண்டி புதைத்துவிடும். துரோகத்தின் பின்னால், தனிபட்ட சுயநலனும் பேராசைகளும்தான் இருக்கும்.
கருணா, தனது அற்ப நலன்களுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து சிங்கள அரசில் இணைந்து கொண்டார். அவரது காட்டிக் கொடுப்பு, ஒரு விடுதலைப் போராட்டத்தையும் அதனை முன்னெடுத்த இயக்கத்தையும் அழித்ததுடன் லட்சக்கணக்கான அப்பாவி மக்களையும் காவு கொள்ளக் காரணமாக இருந்தது. அது வரலாறு முழுவதும் பழியாக தொடரத்தான் போகின்றது.
துரோகம் வரலாற்றில் ஒருபோதும் மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகவே கருதப்படுகின்றது. இன்றைக்கு கருணா என்னவோ எல்லாம் பேசிப் பார்க்கிறார். எனது தலைவர் பிரபாகரன் என்றும் சொல்கிறார். அமைச்சராக இருந்து என்னவோ எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் இன்றுவரை மக்களின் ஆதரவை அவரால் பெற முடியவில்லை. அதுதான் துரோகத்தின் பரிசு. அதுதான் துரோகத்தின் விளைவு.
அண்மையில் கருத்து தெரிவித்த கருணா, ஆனையிறவில் மூவாயிரம் இராணுவத்தை ஒரே இரவில் கொன்றேன் என்று பேசினார். இப்படிச் சொன்ன கருணாவை சிலர் புலி வீரனாக சித்திரிக்க முயன்றனர். அத்துடன் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் அவரைப் புலியாக காண்பிக்க முயற்சிகளை செய்தனர். ஆனால் கருணாவின் நோக்கம் வேறு.
கருணாவின் வாக்குமூலம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சாட்சியம் என்றும் புலிகளே போர்க்குற்றவாளிகள், இராணுவமல்ல என்பதையே கருணா சொல்ல வருகிறார் என்றும் மகிந்தவும் அவர் சார்ந்தவர்களும் இப்போது சொல்லி வருகின்றனர். உண்மையில் கருணாவின் நோக்கம் இதுதான். யானை செத்தாலும் ஆயிரம் பொன் என்பது போல கருணா எதைச் சொன்னாலும் அதன் நன்மை இலங்கை அரசுக்கே.
இப்போது இதேவேலையை செய்யத் தொடங்கியுள்ளார் வடக்கில் ஒரு கருணா. புலிகளின் புராணத்தைப் பாடிப் பாடியே அரசியல் செய்து வந்த சிறீதரன் தனது உண்மை முகத்தை காண்பிக்கத் தொடங்கியுள்ளார். அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் எந்த துரோகத்தையும் செய்யத் தயார் என்பதை சிறீதரன் நன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.
முள்ளிவாய்க்கால் தெரியாத சிறீதரன், தனது குடும்பத்தை கப்பலின் ஊடாக விரைந்தெடுதத்துவிட்டு, மக்களின் இனப்படுகொலை காயம் ஆறுவதற்கு முன்பாகே அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சென்று தனக்கு ஆசனம் வழங்குமாறு கேட்டார். எதற்கெடுத்தாலும் முள்ளிவாய்க்கால் பிணங்கள் கண் முன்னே நிற்பதாகவும் புலிகளின் நினைவுகளை நெஞ்சில் சுமப்பதாகவும் பேசிப் பேசியே வாக்குகளை அள்ளினார்.
இன்றைக்கு தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாறாக சிறீதரன் பயணிக்கிறார். விடுதலைப் புலிகளையும் அவர்களின் போராட்டத்தையும் தலைவர் பிரபாகரனையும் ஏற்க மாட்டேன் என்று சொன்ன சுமந்திரனை இன்று சிறீதரன் ஆதர்ச தலைவராக ஏற்று ஆதரிப்பதே இந்த துரோகம் ஆகும். சிங்களர்களுடன் வாழ ஆசைப்படுகின்ற, ஒற்றையாட்சியை விரும்புகின்ற சுமந்திரனைதான் சிறீதரன் இன்றைக்கு ஆதரிக்கின்றார்.
அவர் சுமந்திரனை ஆதரிப்பதுகூட அவர் விருப்பமாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால், அதற்காக பொய்களையும் புரட்டுக்களையும் கூறி ஒரு விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. நீலன் திருச்செல்வம் இருந்திருந்தால் உதவி பெற்றிருக்கலாம் என தலைவர் கூறியதாக ஒரு பொய், இலங்கை அரசு கிரிக்கெட் கிண்ணம் வென்றபோது தலைவர் அதைக் கொண்டாடினார் என்று ஒரு பொய்.
இந்த இரண்டு பொய்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்ற தலைவர் பிரபாகரனை மிக மோசமாக அவமதிக்கின்ற மிகப் பெரும் துரோகங்கள் ஆகும். அத்துடன் தலைவர் அவ்வளவு பிழையானவரல்ல என்று கூறி அவரை பிழையானவராக்கியதும் பாலா அண்ணாவைப் போன்றவர் சுமந்திரன் என்று கூறி தேசத்தின் குரலை அவமதித்ததும் விடுதலைப் போராட்டத்திற்கு செய்த பெரும் துரோகங்கள்.
எதற்காக இப்படி சிறீதரன் பேசினார்?
சுமந்திரன் தரப்பில் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக பெருமளவு நிதி சிறீதரனுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்லுகின்றனர். அத்துடன் இம்முறை தேர்தலில் மாவை சேனாதிராஜாவும் சம்பந்தனும் தோற்க மாவையின் இடத்தை சிறீதரனும் சம்பந்தனின் இடத்தை சுமந்திரனும் கைப்பற்ற திட்டம் வகுக்கப்படுகின்றது. தங்கள் சுயநல அரசியலுக்காக தமிழ் இனத்திற்கு மாத்திரமின்றி சொந்தக் கட்சிக்கே துரோகம் இழைக்கும் மோசமான திரைமறைவு வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
இங்கே சுமந்திரனைவிட சிறீதரன் ஆபத்தானவராக கருதப்படுகிறார். ஏனென்றால் சுமந்திரன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளிப்படையாகவே பேசி வருகின்றார். ஆனால் சிறீதரன் தன்னை தமிழீழ தேசியத் தலைவர் போலா வேடமிட்டு புலிகளை புகழ்ந்து அரசியல் செய்துவிட்டு இன்றைக்கு அதே தலைவரை பிழையானவர் என்று காட்டி புலிகளை இழிவுபடுத்தி சுமந்திரனை புனிதப்படுத்தும் நாசகார வேலையை செய்வதே மக்களின் அதிருப்திக்கு காரணம் ஆகும்.
சுமந்திரனை ஆரம்ப காலத்தில் கடுமையாக சிறீதரன் எதிர்த்து வந்தார். தனது ஆதரவாளர்கள் யாரும் சுமந்திரனை ஆதரிக்க கூடாது என்றும் கிளிநொச்சிக்குள் சுமந்திரனை அழைத்து வருபவர்கள் துரோகிகள் என்றும் கூறினார். இதனால் ஒரு பிரதேச சபை உறுப்பினருடன் கோபித்துக்கொண்டு அவரை துரோகி என்றார். அத்துடன் கிளிநொச்சியில் உள்ள பலரை கொண்டு சுமந்திரனுக்கு எதிராக பிரச்சாரங்களை செய்யத் தூண்டினார். சிறீதரனை நம்பி சுமந்திரனை எதிர்த்தவர்கள் இன்று அனாதை ஆகியுள்ளனர்.
சிறீதரனை துரோகி என நாம் சொல்லவில்லை. சுமந்திரன் பிழையானவர் என்றும் அவரை ஆதரித்து கிளிநொச்சிக்கு அழைத்து வருபவர்கள் துரோகிகள் என்றும் சொன்னவர் சிறீதரன். அவரது கூற்றுப்படியே சிறீதரன் இன்று துரோகி ஆகியுள்ளார். இலங்கையில் மாத்திரமின்றி உலகம் முழுதும் பரந்து வாழும் மக்கள் சிறீதரனின் சுமந்திரன்மீதான திடீர் காதலை எதிர்த்து கருத்துக்களை கூறி வருகிறார்கள். அத்துடன் சுமந்திரனுக்காக தேர்தல் தோல்வியை ஏற்கத் தயார் என்று சிறீதரன் கூறியுள்ளார். இத்தகையவர்களை அகற்றி, தமிழ் தேசிய அரசியலை பலப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்.
தமிழ்க்குரலுக்காக தாயகன்
(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)