துரோகத்திற்கு துணைபோகும் வால்பிடி அரசியல்!

sri pasu kuru
sri pasu kuru

வீரத்திற்கும் தியாகத்திற்கும் பெயர் பெற்ற ஒரு மகோன்னதமாக விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடம்தான் கிளிநொச்சி. தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சி மண் அன்றைக்கு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த மண்ணையும் அந்த மண்ணில் நடந்த விடுதலைப் போராட்டத்தையும் கேவலப்படுத்தும் வால்பிடி அரசியல் இன்று அங்கே நடப்பதுதான் பலருக்கும் வேதனை தருகின்ற விடயம்.  

மற்றவர்களை நம்ப வைத்த கழுத்தறுப்பதும் நம்பிக்கைக்கு எதிராக செயற்படும் மாத்திரம் துரோகம் அல்ல. பெரும் துரோகங்கள் நடக்கின்ற சமயத்தில் எதையும் பேசாமல் கள்ளமாக இருப்பதும் துரோகம்தான். உலகமே முகம் சுழிக்கும் ஒரு விடயத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் பேசியுள்ளார். தமிழீழ தேசியத் தலைவரை சுமந்திரன் கொச்சைப்படுத்திய நிலையில், அந்த சுமந்திரனுக்காக இன்னுமொருபடி மேல் சென்று சிறீதரன் தலைவரை அவமதித்துள்ளார்.

இதற்கு எதிராக உலகம் முழுவதிலும் இருந்து இன உணர்வாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் தங்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டுள்ளார்கள். கிளிநொச்சியில் இருந்தும் பலர் சிறீதரனை கடுமையாக விமர்சித்த வண்ணமுள்ளனர். துரோகத்தால், சுமந்திரனை விஞ்சிவிட்டார் சிறீதரன் என்றால், அவருக்கு கீழ் உள்ள முன்னாள் அமைச்சர் குருகுலராஜாவும் முன்னாள் வட மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளையும் சிறீதரனை விஞ்சுகிறார்கள்.

அதிலும் திரு பசுபதிப்பிள்ளை அவர்கள், 2009இற்கு முன்னரான காலத்தில் இருந்த நிலைக்கு இன்றைக்கு இப்படியொரு அடிமையாக இருப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. நாடி, நரம்பு, இரத்தம் எல்லாம் பதவி வெறியும் ஆசையும் உள்ளவர்கள்தான் இப்படி அடிமையாகவும் வால்பிடி அரசியலுக்காகவும் வாழ முடியும். இவர்கள் எல்லோரும் சிறீதரனின் கருத்தை ஏற்றுத்ததான் வாய் மூடிகளாக உள்ளார்களா? சிறீதரன் சொன்னால்தான் மூச்சைக்கூட விடுவார்களா?

இவர்கள் எல்லோரும் துரோக அரசியலுக்கும் வால்பிடி அரசியலுக்கும் துணைபோனவர்கள் என்பதை ஏற்கனவே கண்டிருக்கிறோம். முன்னாள் முதல்வரும் நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவந்த நிலையில், சிங்கள ஆளுரிடம் சென்று அவரை பதவி விலக்கக் கோரி, தம் பதவிப் பேராசைகளை வெளிப்படுத்தினார்கள். சுமந்திரன் மற்றும் சிறீதரனின் தூண்டுதலில்தான் இந்த வேலைகள் நடந்தன. அப்போதே இவர்களின் துரோக முகம் வெளிப்பட்டிருந்தது.

கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா ஊழல் காரணமாக பதவி விலக்கப்பட்டார். திரு பசுபதிப்பிள்ளை அவர்கள், வட மாகாண உறுப்பினராக இருந்து என்ன செய்தார்? சிறீதரன் தனது முன்னாள் கல்விப் பணிப்பாளரை திருப்திப்படுத்த வட மாகாண சபை உறுப்பினர் பதவியை வழங்கி, அவர்களை தனது அடிமைகளாக வைத்து வால்பிடி அரசியல் கலாசாரத்தை கிளிநொச்சியில் வளர்த்து வருகின்றார்.

இவர்களுக்கு உண்மையில் இனப் பற்றும் சமூக அக்கறையும் இருந்திருந்தால், சுமந்திரன் விடுதலைப் போராட்டத்தையும் தலைவரையும் அவமதித்த போது அதை எதிர்த்திருப்பார்கள். இப்போது சிறீதரன் சுமந்திரனுக்காக தலைவர் பிரபாகரனையும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தையும் அவமதித்த போது அதற்கு உடனடியாக தங்கள் விமர்சனங்களை தெரிவித்திருப்பார்கள்.

ஆனால் இவர்கள், இந்த மூப்பு வயதிலும் பதவி வெறியில், பதவி ஆசையில் கைகட்டி, வாய் மூடி கள்ளத்தனமாக இருக்கின்றனர். இவர்களும் சிறீதரனின் பச்சோந்தித்தனத்தையும் சுமந்திரனின் இனத் துரோகத்தையும் ஏற்று அதனையே பின்பற்றுகின்றனர். தயவு செய்து, துரோக நிழலில் வாழ்ந்து, உங்கள் பரம்பரைக்கு துரோகத்தின் தடத்தையும் வடுவையும் விட்டுச்செல்லாமல் அரசியலை விட்டு ஒதுங்கி ஓய்வெடுங்கள்.

வால்பிடி அரசியலாக மாத்திரமின்றி எடுபிடிகளாகவும் இருக்கிறீர்களே? இப்போதும் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் வாக்கு கேட்கும் வேலையில் இரவு பகலாக செய்கிறீர்கள். எடுபிடிகளால் என்ன நன்மை? குருகுலராஜா கல்வியமைச்சராக இருந்தபோது, சிறீதரன் சொன்னவற்றையே செய்தார். இதனை அவரே ஒரு தொலைபேசி உரையாடலில் ஒப்புக்கொண்டுள்ளார். மீண்டும் கல்வி அமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவி ஆசையில்தான் சிறீதரனின் துரோகங்களுக்கு குருகுலராஜா துணை போகின்றார்.

2013இல் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, திரு. குருகுலராஜா, முதற் பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணிக்கு சிலை வைக்கப் போவதாக சொல்லி வாக்குகளைப் பெற்றார். இன்றைக்கு இவர்கள் மாவீரர்களுக்கு நன்றாகவே சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள். மாவீரர்களை தங்கள் அரசியலுக்காக கொச்சைப்படுத்தி துரோகங்களையும் அநியாயங்களையும்தான் செய்கிறார்கள்.

அநியாயங்கள் துரோகங்களை தட்டிக் கேட்க துப்பற்றவர்கள், அரசியலை விட்டு ஒதுங்குவதே நல்லது. வால்பிடி அரசியல் கலாசாரத்தை கிளிநொச்சி மண்ணில் விதைப்பதன் மூலம், தைரியமும் நேர்மையும் கொண்ட புதிய தலைமுறையினர் உருவாக இடமளிக்க கூடாது என்பதே சிறீதரனின் நோக்கம். தன் சுயநல அரசியலுக்காக கோமாளிகளையும் வாய்மூடிகளையும் வளர்த்துவிட்டு இறுதிவரை பதவிக் கதிரையில் இருந்து சுகம் காண்பதே இவரது நோக்கம்.

சிந்திக்க தெரிந்தவர்களும் நேர்மையானவர்களும் வந்துவிட்டால் தன்னால் அரசியல் செய்ய முடியாது என்ற சிறீதரன்ன கபடத்தை பொய்மையாக்கி, கிளிநொச்சியின் இளைஞர்கள் இனப்பற்றையும் சமூகப்பற்றையும் வெளிப்படுத்த துணிகரமான அரசியலில் ஈடுபட வேண்டும்.

ஆசைமுத்து சங்கரன்