விக்னேஸ்வரனின் குரல் ஏன் பாராளுமன்றில் ஒலிக்க வேண்டும்!

Samakaala paarvai 1 1
Samakaala paarvai 1 1

போர் முடிந்து கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்த ஒரே ஒரு நன்மை யதெனில், நீதியரசர் விக்கினேஸ்வரனை அரசியலுக்கு அழைத்து வந்தததுதான். தமிழ் மக்களின் அபிலாசைகளை கைவிட்டு, மக்களுக்கு வழங்கிய கொள்கையை கைவிட்டு, மக்கள் வழங்கிய ஆனையைக் கைவிட்டு கூட்டமைப்பு பயணிக்கும் நிலையில்தான், விக்கினேஸ்வரனின் குரல் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டியது காலக்கடமை ஆகியுள்ளது.

முதலில், விக்கினேஸ்வரன் அவர்கள், ஏன் தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கு வேண்டத்தகாதவர் ஆனார் என்பதை சற்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. வடக்கு முதல்வராக பதவியேற்ற காலத்தில் கூட்டமைப்பினரின் ஆலோசனைப்படி அவர் பேசிய சில பேச்சுக்களும் கூறிய சில கருத்துக்களும் தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனங்களை உருவாக்கின. வடக்கில் நிலையாக வாழ்ந்த காலத்தில் மக்களின் உணர்வுகளை உணர்ந்து தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் விக்கினேஸ்வரன்.

பொதுவாக தமிழ் தலைவர்கள், வடக்கு கிழக்கில் உருவாகி, தெற்கில் நிலை கொள்ளுகின்றனர். முதன் முதலில் தெற்கில் உருவாகி வடக்கில் நிலை கொண்டவர் நீதியரசர் விக்கினேஸ்வரன். சுமந்திரன் போன்றவர்கள் தெற்கில் உருவாகி தென்னிலங்கையாகவே, வெளிப்படையாக சொன்னால் ஒரு சிங்கள அரசியல்வாதியாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தெற்கிலிருந்து வந்து வடக்கு மக்களின் மனங்களை மாத்திரமல்ல, கிழக்கு மக்களுக்கும் பிரியமான முதல்வரானார் விக்கி.

வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தியமை, சமஸ்டி ஆட்சிமுறையை கோரியமை, இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியமை முதலிய காரணங்களுக்காக,  தமிழ் தேசியத்தை இறுகப் பற்றி அதற்கு நேர்மையாக வாழ்ந்தமைக்காக,  இலங்கை அரசுக்கு மறைமுகமாக ஆதரவுகளை வழங்கியமையை எதிர்த்தமைக்காக, இனப்படுகொலை குற்றங்களை பாதுகாக்கும் வகையில் சர்வதேச ரீதியாக செயற்பட்டமையை எதிர்த்தமைக்காக… இத்தகைய காரணங்களுக்காகவே சம்பந்தன், சுமந்திரன் தரப்பினருக்கு விக்கினேஸ்வரன் பிடிக்காதவரானார்.

எதை எல்லாம் செய்வோம் என்று கூட்டமைப்பினர் வழங்கிய தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளாக வழங்கினரோ அவைதான் மேற்சொன்ன விடயங்கள். வெளிப்படைத் தன்மையும் கொள்கைப் பற்றும்தான் சம்பந்தன் சுமந்திரன் தரப்பினருக்கு சிக்கலானதாக இருக்கின்றது. இலங்கை அரசை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த போது, அதனை விமர்சித்தார் முன்னால் முதல்வர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் தேவைகளையும் அவசியங்களையும் நிறைவேற்றுங்கள் என்பதே அவரின் அழுத்தமான கோரிக்கையாக இருந்தது.

ஊடங்களும் புத்திஜீவிகளும் இதே கருத்தையே அப்போது கூட்டமைப்பை நோக்கி வலியுறுத்தினர். இலங்கை அரசை ஆதரிக்கின்ற மயக்கத்தில் ஒரு மிகப் பெரிய  துரோகத்தை கூட்டமைப்பு செய்தது. முதல்வராக இருந்த விக்கியை பதவி விலக்கி தமக்கு பதவியை தருமாறு இலங்கை அரசின் ஆளுநரிடம் சென்று கோரிக்கை வைத்தனர் சம்பந்தன் சுமந்திரனின் ஆதரவு வட மகாண சபை உறுப்பினர்கள். வரலாறு ஒருபோதும் இந்த துரோகத்தை மறவாது. ஆனாலும் மக்கள் திரண்டு தெருக்களில் நின்று போராட்டம் செய்து அன்றைய முதல்வர் விக்கியைப் பாதுகாத்தனர். கூட்டமைப்பு தன் துரோகத்தால் த் முகத்தில் கரியை பூசிக் கொண்டது.

மக்களின் எதிர்பார்ப்புக்காக தனது அரசியல் பயணத்தை தனியாக தொடங்கி, கூட்டமைப்பினரின் தவறுகளை சுட்டிக்காட்டி, தமிழ் மக்களின் நியாயங்களை சிங்கள அரசுக்கும் உலகத்திற்கும் எடுத்துரைக்கின்றார் விக்கி. ஈழத்தின் பூர்வீகக் குடிகள் ஈழத் தமிழ் மக்களே என்பதை சிங்கள வரலாற்று ஆசிரியர்களும் புத்திஜீவிகளும் ஏற்றுக்கொள்ளுகின்ற அளவுக்கு சான்றுகளுடனும் சரியாகவும் முன்வைத்தார். வரலாற்று பிரக்ஞையும் அறிவுமற்ற தலைவர்கள் வாய் மூடி பதவி சுகத்தில் இருக்கின்ற நிலையில், விக்கியின் குரல் தமிழர்களுக்கு மிகவும் அவசியமல்லவா?

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது, இனிக் கோருவதில் பயணில்லை. நடந்தது இனப்படுகொலையா இல்லையா என்ற மயக்கங்களுடன் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் மத்தியில் இலங்கை நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை வடக்கு மாகாண – ஜனநாயக சபையில் ஒரு மனதுத் தீர்மானமாக நிறைவேற்றி, வடக்கு கிழக்கு மக்களின் மனவெளிப்பாட்டை ஐ.நாவுக்கு அறிவித்த வரலாற்று முக்கியத்துவமானது. இனப்படுகொலைக்கு எதிரான இக் குரல் இலங்கை பாராளுமன்றத்தை அதிரப் பண்ணுவது காலத் தேவையல்லவா?

கடந்த ஆட்சியில் அரசை ஆதரித்து வாய்ப்புக்களை தவறவிட்டு, பெருந்தவறுகளை கூட்டமைப்பினர் செய்துவிட்டு இப்போது கையை விரிக்கின்றனர். வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, புலிப் புராணங்களைப் பேசி தேர்தலில் வென்றுவிடலாம்.. இதையே காலம் காலமாக செய்து மக்களை ஏமாற்றலாம் என்ற அசமந்தத்தில் இருப்பவர்களுக்கு விக்கினேஸ்வரன், அருந்தவபாலன் போன்றவர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார்கள். இத்தகைய மாற்று அரசியலை வளர்த்தெடுக்க தவறினால் அது ஈழத் தமிழினத்தை ஏமாற்றியே காலத்தை கடத்தும் அரசியலுக்கு உரமூட்டுமல்வா?

தமிழர்களின் கொள்கையை கைவிட்டு தமிழ் மக்களின் போராளிகளை கொச்சைப்படுத்தி அரசியல் செய்யும் நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வந்துவிட்டனர். வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், சுய நிர்ணய ஆட்சி கொண்ட தீர்வை வலியுறுத்துகின்ற, நடந்தது இனப்படுகொலை என்று கூறி, அதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்ற நீதியரசர் விக்கினேஸ்வரனின் குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதே தமிழினம் நீதியையும் அமைதியையும் உரிமையையும் வெல்வதற்கான ஒரே வழியாகும்.

தமிழ்க்குரலுக்காக தாயகன்