கனவுகளும் பலன்களும்

135538269 56a13da03df78cf77268b27b
135538269 56a13da03df78cf77268b27b

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும், நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும்.

பொதுவாகவே கனவுகள் அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும் என்கிறது சாஸ்திரம். நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம்.

கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று பசுவுக்கு புல், பழம், கீரை கொடுக்க வேண்டும். அதன் முன் நின்று, தான் கண்ட கனவினை மனசுக்குள் சொல்ல வேண்டும்.

விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு. ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.

தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும். திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், மனதிலே நிம்மதி பிறக்கும். கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும். மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும்.