சற்று முன்
Home / தேசத்தின்குரல் / உள்வீட்டு அரசியல் / விக்னேஸ்வரனுடன் அணி சேரத் துடிக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்!

விக்னேஸ்வரனுடன் அணி சேரத் துடிக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்!

தேர்தல் நெருங்கி விட்டாலே போதும் கூட்டமைப்பு பங்காளிக் கட்சியான ரெலோ போர்க் கொடி தூக்கி விடும். “இந்தா போகிறன் விடு என்னை” என்று கெஞ்சி ஆசன ஒதுக்கீட்டை அதிகமாக அல்லது தனது எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்வது வழமைதான். இப்போதும் ரெலோ வழக்கம்போல தனது சித்து விளையாட்டை கையில் எடுத்துள்ளது. போதாதற்கு புளொட் கட்சியையும் அது தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிதானாம்.

கூட்டமைப்புக்குள் எழுந்த இந்தக் குழப்பத்துக்கும் கூட்டணிக்கும் என்ன சம்பந்தம்?

வழமையான தேர்தல்கள் போல இல்லாமல், இம்முறை தேர்தல் கூட்டமைப்புக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது. க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியைப் பார்த்து கூட்டமைப்புக் கட்சிகள் கொண்டுள்ள அச்சம்தான் காரணம். தமிழ் மக்கள் கூட்டணியால் அதிக ஆசனங்களைக் கைப்பற்ற முடியாவிட்டாலும் அது கூட்டமைப்பின் வாக்குகளை கணிசமானளவு உடைத்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. கூட்டணியின் பலம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பலமாக உள்ள நிலையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் நிலையோ மிக மோசமாக உள்ளது.

வழக்கமாக, யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் இப்போது கட்சிக்குள் இல்லை. இதனால் யாழ்ப்பாணத்தில் ரெலோவுக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியான நிலையில், இப்போது விக்னேஸ்வரனின் அணியால் அது இல்லை என்றே ஆகும் நிலையில் உள்ளது. இதனால், தன்னை வன்னி மாவட்டத்துக்குள் பலமாக்க வேண்டிய தேவையும் உள்ளது. ஆனால், அக்கட்சியின் தலைவரான சொந்த இடமான மன்னார் மாவட்டத்திலேயே அவருக்கு செல்வாக்கு குறைந்துள்ளது. இந்த இலட்சணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலமாக உள்ளனர். இதனால், அவருக்கான வாய்ப்பு பறிபோகும் நிலையில் உள்ளது. எனவே வன்னி மாவட்டத்தை அதிக ஆசனங்களைப் பெற்று யாழ்ப்பாணத்தை விட்டுக்கொடுக்கும் நோக்கில் அக்கட்சி உள்ளது.

ஆனால், இது சாத்தியமற்றதாகும் நிலையே கணிசமாக உள்ளது. இதனால் மக்கள் ஆதரவு பலமாக இருக்கும் விக்னேஸ்வரனின் அணியில் சேர்ந்தால், வன்னிக்குள் தாங்கள் வெற்றிக் கொடி நாட்டலாம் என்பது ரெலோவின் கணிப்பாக உள்ளது. இதனால்தான், சிவனே என்று கிடந்த புளொட்டையும் உசுப்பேத்தி விட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இப்போதை குமைச்சலைக் கொடுக்கத் தொடங்கி விட்டது.

திரை மறைவில் தமிழ் மக்கள் கூட்டணியுடனும் சில பேச்சுகளை நடத்தி விட்ட நிலையில், இதற்கு தூதாக செயற்பட்டவரையே உள்ளிழுக்க ஆசை வார்த்தைகள் காட்டுவதாக உள்வீட்டுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு அவரும் கொஞ்சம் மசிந்து கொடுக்கிறார் என்றும் அத்தகவல் கூறுகிறது.

எனவே, இனி வரும் நாள்கள் கூட்டமைப்பு – கூட்டணி ஆதரவுப் போர் மிகத் தீவிரமாக இருக்கும் எனத் தெரிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி!

விடுதலைப் புலிகள் 600 பொலிசாரைக் கொன்று போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ஐ.நாவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு ஆதரவாக ...