போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம் – கருணா

karuna
karuna

போராட்ட காலத்தில் கூட கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வாகரை, பால்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று (24) மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“கல்வி என்பது ஒரு பொதுவான விடயம். நாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன். அதில் போராட்டத்தில் கல்வி பிரிவை ஒரு அம்சமாக உருவாக்கி வைத்திருந்தேன்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கூடியளவு கல்வி வளர்ச்சிக்காக கல்விக் கழகம் என்ற நிறைய அமைப்புக்கள் செயற்பட்டது. போராட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் கல்வி அபிவிருத்திக் குழு என்று முதல் முதலாக ஆரம்பித்தோம்.

வாகரைப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளை தரமுயர்த்தி உள்ளோம். இன்னும் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இதில் கூடுதல் கவனம் எடுத்து செயற்படுவேன்” என தெரிவித்தார்.