நாட்டை அபிவிருத்தி செய்ய அரசியலமைப்பில் மாற்றம் தேவை – மைத்திரி

00 5
00 5

அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியிடமிருந்த அதியுச்ச அதிகாரங்களை நான் நாடாளுமன்றுக்கு வழங்கினேன். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்கினேன். பிரதமருக்கு வழங்கினேன். இலங்கையின் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களாக இருந்தது.

நான்தான் இதனை ஒரு வருடம் குறைத்துக்கொள்ளுமாறு கூறினேன். இதனை நான் அன்று மேற்கொள்ளவில்லை என்றால் இன்றும் நான் ஜனாதிபதியாகத்தான் இருந்திருப்பேன்.

இவ்வாறான செயற்பாடுகளை நான் மேற்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அப்படியானால், இந்த வருட நவம்பரில்தான் ஜனாதிபதித் தேர்தல் நடந்திருக்கும்.

அத்தோடு, 19வது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவரவும் நான்தான் அதிகமாக முயற்சித்தேன். இதில் சில குறைபாடுகள் இருக்கின்றன. இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதனால்தான் நான் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுகிறேன். இதனால், நாட்டை முன்னோக்கிக் கொண்டுச்செல்ல முடியாது. அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டும்தான் நாட்டை சக்தி மிக்கதாக மாற்ற முடியும்.

இதனை தற்போதுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்கூட மேற்கொள்ள முடியாது. அவருக்கு நாடாளுமன்றின் பெரும்பான்மையான பலம் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நாட்டுக்கு சிறந்ததொரு தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விளங்குகிறார். இப்படியான ஒருவருக்கு நாம் எம்மால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.