8 மணி நேரம் வவுனியாவில் ஊரடங்கு தளர்வு

20200324 073306
20200324 073306

வவுனியாவில் ஊடாடங்கு உத்தரவு தளர்த்தப்படத்தை தொடர்ந்து பொருட்கள் கொள்வனவு செய்ய கடைகளின் முன் மக்கள் திரண்டுள்ளனர் .

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்திருந்தனர்.

கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நாடு பூராகவும் ஊடரங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வந்தபோதும், வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும், தமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், மருத்துப் பொருட்கள், மரக்கறி வகைகள் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் வர்த்தக நிலையங்களின் முன்னால் நீண்ட வரிசையில் நின்றனர்.

அதேபோல் பணத்தினைப் பெற்றுக் கொள்வதற்கும் வங்கிகள் முன் மக்கள் வரிசையில் நின்றனர்.

நகருக்குள் குவிந்த மக்களை வர்த்தக நிலையங்களின் முன்னால் நின்று பொலிசார் ஒழுங்கு முறைப்படுத்தியதுடன், ஒவ்வொருவரையும் மாஸ் அணிந்து ஒரு அடி இடைவெளியில் நிற்குமாறும் பணித்தனர்.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் நகரை நோக்கி மக்கள் குவிந்தமையால் நகரப்பகுதி சனநெரிசல் மிக்கதாகவும், வாகன நெரிசல் மிக்கதாகவும் காணப்பட்டதுடன், பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

அத்துடன் வர்த்தக நிலையங்களின் முன்னால் கொரனா விழிப்புணர்வு பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, வவுனியாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்கு சட்டமானது வெள்ளிக்கிழமை கால 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.