தேர்தல் காலத்தில் இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள திட்டம்

Sri Lanka Election Commission
Sri Lanka Election Commission

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் திடீர் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு விசேட வேலைத் திட்டம் தயாரிக்கப்படும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

திடீர் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டால் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லல் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை கட்டுப்படுத்துதல், இடம்பெயந்தோர் முகாம்களில் இருக்கும் நிலை ஏற்பட்டால் அங்குள்ள வாக்காளர்களை வாக்கு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் முறை தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினத்தில் ஏதேனும் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், அமைச்சு மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்புடன் விசேட வேலைத்திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.