தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கவே விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினேன்

karuna
karuna

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணத்தை தான் கொண்டிருந்ததாகவும் என்னுடைய நிலைப்பாட்டிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு விருப்பமில்லாத நிலையிலேயே தான் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை அடுத்து, இந்திய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பகைத்துக்கொண்டதாக கூறிய கருணா அம்மான், அதனூடாகவே தமிழீழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

தமிழீழப் போராட்டத்திற்கு முன்னர் இந்தியா ஆதரவை வழங்கிய போதிலும், விடுதலைப் புலிகளின் தவறுகள் காரணமாக இந்தப் போராட்டம் வெல்ல முடியாத ஒரு போராட்டமாக மாற்றம் பெற்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இனிவரும் காலங்களில் தனிநாட்டு கோரிக்கைக்கான போராட்டமொன்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறுகிறார்.

இலங்கை என்ற ஒருமித்த நாட்டிற்குள் ஒரு அதிகார பகிர்வு என்ற கோரிக்கைக்கு அமையவே தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட கருணா அம்மான், இனி ஒருமித்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்கான தீர்வே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான ​பொலிஸ், காணி உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்படுவதன் ஊடாக தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தான் காட்டிக் கொடுத்ததாக கூறும் விடயமானது, ஒரு தவறான விடயம் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கிறார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் தான் ஒரு எண்ணத்தை கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தனது அந்த நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விருப்பமில்லை என கூறிய அவர், அதனால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தான் வெளியேறியதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அம்மான் மாத்திரமே காட்டிக் கொடுத்தார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், விடுதலைப் போராட்டம் தொடர்பில் அறியாத நடுவிலுள்ள சிலரே தான் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாக பிரசாரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.