ஜனாதிபதியின் மரணதண்டனை கைதியின் மன்னிப்பிற்கு அனுர எதிர்ப்பு

anura 2
anura 2

2005 ஆம் ஆண்டு ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் 19 வயது யுவதியொருவரின் கொலை தொடர்பில் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை கைதியாகியிருந்த ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவே என்பவருக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றினூடாக தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மற்றும் நியாயமற்ற முடிவு, நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை புறக்கணித்துவிட்டது எனவே ஜனாதிபதி தனது முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலையீட்டையும் கோரியுள்ளார்.

கொல்லப்பட்ட யுவதியின் சகோதரியின் காதலன் ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவே இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 12 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனை அடுத்து குற்றவாளி சார்பாக மேன்முறையீடு செய்யப்பட்டபோதும் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மரணதண்டனை குற்றவாளிக்கு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் எனவும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி உங்கள் பதவிக்கால முடிவில் அதனை மோசமானதாக மாற்றியுள்ளீர்கள் என கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.