சுழிபுரம் ரெஜினாவின் கொலை இரசாயன பகுப்பாய்வில் உறுதி

sulipuram regina
sulipuram regina

சுழிபுரம் மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு தொடர்புள்ளமை அரச இரசாயனப் பகுப்பாய்வினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுதொடர்பான உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு இரு வாரங்களும், சந்தேகநபர்களின் விளக்கமறியலை டிசம்பர் இறுதிவரை நீடிக்கவேண்டும் என அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்திருந்த போது சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை நீடிக்குமாறு அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் மனுவை சமர்ப்பித்திருந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது.

ரெஜினாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 17 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.