தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை

mn meeting
mn meeting

மட்டக்களப்பு மாநகர பிரதேசத்திற்கு உட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாதவிடத்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர பிரதேசத்திற்கு உட்பட்ட தனியார் கல்வி நிலையங்களின் ஆரோக்கிய நிலையும் அதனை மேம்படுத்தலுக்குமான கலந்துரையாடல் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கலந்துரையாடலில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் முன்னிலை வகித்ததுடன் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதம பொது சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மாநகர உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது உரையாற்றிய முதல்வர் தி.சரவணபவன் தனியார் கல்வி நிலையங்கள் மாநகர சபையினால் அவதானிக்கப்பட்டு கல்வி நிலையங்களுக்கான அடிப்படை வசதிகளை அமைக்குமாறு கூறி ஒருவருட காலமாகியும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அவ்வாறு அடிப்படை வசதிகள் இல்லாத கல்வி நிலையங்கள் இனி அவதானிக்கப்பட்டு பொது சுகாதார பரிசோதகரால் கடிதம் அனுப்பப்படும். அதிலிருந்து மூன்று நாட்களுக்குள் கல்வி நிலையத்தால் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் குறித்த கல்வி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

தனியார் கல்வி நிலையங்களை கண்காணித்து அதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரத்தினை பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு மாநகர சபை வழங்கியுள்ளதாக இதன் போது தெரிவிக்கப்பட்டதுடன் சில கோரிக்கைகளும் தனியார் கல்வி நிலையத்தாருக்கு முன்வைக்கப்பட்டது.

  • கல்வி நிலையங்களில் கட்டாயம் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக இரு மலசல கூட வசதி.
  • புறவட் போன்ற பலகையினை ஆசனங்களாக பயன்படுத்தக் கூடாது.
  • கல்வி நிலையத்தின் சுற்று வேலி முற்றாக மூடியும் இருக்கக் கூடாது.
  • குடிநீர் வசதி, தீயணைப்பு வசதி, போன்றன இருத்தல் வேண்டும்.
  • பொது வீதிகளை வாகன தரிப்பிடத்துக்காக பயன்படுத்தி போக்குவரத்தினை இடையூறு ஏற்படுத்த வேண்டாம்,
  • ஞாயிற்றுக்கிழமை உட்பட மாணவர்களுக்கு போதிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்,
  • குறிப்பாக பெண் மாணவர்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதுடன் அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் இதனை நடைமுறைப்படுத்தாத தனியார்
கல்வி நிலையங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு குறித்த கல்வி நிறுவனங்கள்
மூடப்படும் சாத்தியம் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.