தேர்தல் பகிஸ்கரிப்பு கோட்டாவை வெல்ல வைப்பதற்கல்ல

tnpf
tnpf

மகிந்த மற்றும் கோட்டபாய ராஐபக்சவினர் இன அழிப்பைச் செய்தவர்கள் என்பதால் அவர்களை வெற்றி பெறச் செய்யக் கூடாது என்று கடந்த காலங்கிளில் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது கோட்டபாய ராஐபக்சவுடன் பேசுவதில் என்ன நியாயம் இருக்கின்றது எனக் கேள்வியெழுப்பியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இதுவரைக்கும் தாம் சொல்லி வந்த நிலைப்பாடுகளையும் இப்போது எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்த வேண்டுமென கோரியுள்ளது.

இத் தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டுமென நாங்கள் தற்போது கூறுகின்றது கோட்டபாயாவை வெல்ல வைப்பதற்கு என சிலர் எம் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். தேர்தலைப் பகிஸ்கரிப்பதென்ற எங்கள் நிலைப்பாடுகள் நாங்கள் யாரையும் ஆதரிப்பதாக அல்ல. இத் தேர்தல் பூகோளப் போட்டியைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாட்டுக் கோரிக்கையாகும் என கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஐனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டள்ள நிலைமையில் இந்தத் தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுப்பது என்பது தொடர்பாக கட்சிகளுக்கிடையே பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதிலும் இத் தேர்தலில் யாரை ஆதரிப்பது. யாரை ஆதரிப்பதில்லை, பொது வேட்பாளரை நியமிப்பது, தேர்தலைப் பகிஸ்கரிப்பது என்பது குறித்தான கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலைமையே காணப்படுகிறது. இவ்வாறான நிலைமையில் சில கட்சிகள் தமது நிலைப்பாடுகளை அறிவித்தும் இருக்கின்றன.

இந் நிலையில் தமிழ்த் தரப்பில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கோட்டபாய ராஐபக்சவுடன் பேச இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. அதாவது கோட்டபாய தரப்பினர் கூட்டமைப்பை சந்திக்க கேட்டு இருந்ததாகவும் ஆனாலும் இனப்பிரச்சனை தீர்வு குறித்து மகிந்த ராஐபச்சவோடு பேசுமாறு கூறியதாகவும் அதற்கான சந்திப்பை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கோட்டபாய ராஐபக்சவும் மகிந்த ராஐபக்சவும் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை கட்டவிழ்த்து விட்டவர்கள் என்பதால் கடந்த 2015 ஆம் ஆண்டு மகிந்தவைத் தோற்கடிப்பதற்காக மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, அல்லது மார்டின் லூதர் சிங் என்று சொல்லி மைத்திரிபால சிறிசேனவை செல்ல வைக்கின்ற நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்த இடத்தில் இருக்கின்ற கேள்வி என்னவென்றால் இனஅழிப்பை செய்தவர்கள் மகிந்த மற்றும் கோத்தபாய என்று கூறியவர்கள் இப்போது கோட்டாயபாயவுடன் பேசுகின்றார்கள் என்றால் அதில் என்ன நியாயயம் இருக்க முடியும் என்பது தெரியவில்லை.

அவர்கள் இவரைக்கும் சொல்லி வருகின்ற அடிப்படையிலே இவர்கள் போர்க்குற்றவாளிகள் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. இவர்கள் சர்வதேச குற்றவியியல் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பது தான் எங்களுடைய கருத்து. அதற்காக நாங்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டே வந்திருக்கிறோம்.

இலங்கைத் தீவில் நடைபெறுகின்ற எந்த ஐனாதிபதித் தேர்தலிலும் இந்தப் பூகோளப் போட்டியை தமிழர்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டுமாக இருந்தால் இவர்களை நிராகரித்து தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென் தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் நாங்கள் கடந்த காலத்திலிருந்த இதுவரை காலமும் சொல்லி வருகின்றோம்.

இதனை நாங்கள் அப்பொழுது சொல்லி வந்த போதெல்லாம் இவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது மகிந்த ராஐபக்சவை வெல்ல வைப்பதற்கானது என்றும் இப்பொழுது நாங்கள் அதே கோரிக்கை நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கின்ற நிலையில் அது கோட்டபாய ராஐபக்சவை வெல்ல வைப்பதற்கு என்று சிலர் குற்றஞ்சாட்ட முயற்சிக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட குற்றச்சாட்டை எங்கள் மீது முன்வைக்கப்படுகின்ற நிலையில் கூட்டமைப்பினர் கோட்டபாயவுடன் பேசுவதிலும் எந்த நியாயப்பாடுகளும் இல்லை; அப்படி என்றால் இதுவரைக்கும் தாம் சொல்லி வந்த நிலைப்பாடுகள் சம்மந்ததாக கூட்டமைப்பினர் என்ன சொல்லப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக எங்கள் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

இந்தத் தீவில் நடைபெறும் பூகோள அரசியலின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் தங்கள் சார்பான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு அல்லது தாங்கள் விரும்புகின்றவர்களை வெல்ல வைப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்த தொடர்ச்சியாக முயன்று வருகிறார்கள்.

ஆகையினால் தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக தேர்தல்களைப் பகிஸ்கரித்தால் அந்த சக்திகள் எங்களுடன் பேசி ஒரு முடிவிற்கு வரலாம் என்ற அடிப்படையில் எங்கள் நிலைப்பாடுகளை வெளியிடுகிறோம்.

எங்களது இந்த நிலைப்பாடுகள் என்பது யாரையும் ஆதரிப்பது என்பதாக அல்ல. இந்த பூகோளப் போட்டியைப் பயன்படுத்தி எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதே என்றார்.