பிணை முறி விசாரணை- மீண்டும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி விசாரணை

Law and Justice
Law and Justice

பிணைமுறி விவகாரம் தொடர்பிலான மனுவை மீண்டும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன அறிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தின் போது மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான அரச சட்டத்திரணி லக்மினி கிரியாகம இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை தெளிவுப்படுத்தினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய பிணை முறி விநியோகம் தொடர்பில் தடயவியல் கணக்காய்வை மத்திய வங்கி மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறிப்பாக பேர்பசுவல் டெசரீஸ் நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் மற்றுமொரு நிறுவனமான டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அரச சட்டத்திரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதேபோல் பிணைமுறி விவகாரம் தொடர்பில் மேலும் பல பிரிவுகளில் இரகசிய பொலிஸாரும், மத்திய வங்கியும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன குறித்த மனுவை மீண்டும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

அதன்போது விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.