மத்திய வங்கி ஆளுநரை நியமிப்பதில் சிக்கல்

6 d
6 d

மத்திய வங்கிக்கு புதியஆளுநர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமார சுவாமி இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அவரின் இராஜினாமாவை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் புதிய ஆளுநர் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நிதிச் சட்டங்களுக்கு ஏற்ப, மத்திய வங்கியின் ஆளுநர் ஒருவரை நியமிப்பதற்கு நிதி அமைச்சரின் சிபாரிசு அவசியமாகும். இதனால், தற்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா செய்துள்ளதனால், புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்படும் வரையில் ஆளுநரை நியமிக்க காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் பதவிக் காலம் முடிவடைந்ததன் பின்னர் கலாநிதி இந்திரஜித் குமார சுவாமி மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். இதன்போது, பதில் நிதி அமைச்சராக லக்ஸ்மன் யாபாவினால் பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் புதிய பிரதமர் நியமனம் செய்யப்பட்டதன் பின்னர் இடைக்கால புதிய அமைச்சரவை அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.