தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நலிவடைய செய்வதுதான் இலங்கை அரசின் நோக்கமா?- துரைராசா ரவிகரன்

IMG 0254.JPG
IMG 0254.JPG

தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நலிவடையச்செய்வதுதான் இலங்கை அரசின் நோக்கமா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவில், இந்தியமீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், இதனைவிட மகாவலி (எல்) என்ற போர்வையில் இங்கு காணிகள் அபகரிக்கப்படுகின்றன. எனினும் மகாவலி நீர் இங்கு கொண்டுவரப்படவில்லை.

வன இலாகா என்ற பெயருடன் எங்களுடைய காடுகள் அபகரிக்கப்படுகின்றன. சுமார் முப்பது வருட இடப்பெயர்விற்குப் பிறகு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கொக்குத்தொடுவாய், கருநாடடுக்கேணி உட்பட அந்த மக்களுடைய சிறு புதர்களாக உள்ள காணிகளைக்கூட வன இலாகா எல்லைக் கற்களை நாட்டி அபகரிப்புச் செய்கின்றார்கள்.

இதேபோல் வனஜீவராசிகள் திணைக்களம் என்றபெயரில் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல், நாயாற்றுப்பகுதி என ஆற்றுப் பகுதிகளையும் அபகரிக்கின்றனர்.

இதேவேளை எமது மாவட்டத்திலுள்ள தமிழர்களின் பூர்வீக இடங்கள், அப்பூர்வீக் இடங்களிலுள்ள வரலாற்றுத்தொன்மைமிக்க கல்வெட்டுக்கள், கற்பொழிவுகள் கட்டடச் சிதைவுகளை தொல்லியல் திணைக்களத்தினர் தொல்லியல்சார் இடங்களென அபகரிப்பதுடன் பௌத்த மதத் திணிப்பினை மேற்கொள்கின்றனர்.

இவை அனைத்தையும் அபகரித்தது போதாதெனத் தற்போது எங்களுடைய கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தடுக்கின்ற செயற்பாட்டை செய்வதற்கு கடற்படையினரோ உரியவர்களோ தயங்குகின்றனர். அதன்மூலம் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கின்றார்கள்.

இதே நிலை தென்னிலங்கையில் காணப்பட்டால், அங்குள்ள கடற்பரப்புக்களிலே இவ்வாறு வேற்று நாட்டு மீனவர்கள் வருகைதந்து மீன்பிடியில் ஈடுபட்டால் இலங்கை அரசும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும், கடற்படையினரும் இவ்வாறுதான் வேடிக்கை பார்ப்பார்களா? நிச்சயமாக அவ்வாறான நிலை காணப்படாது.

எனினும் தற்போது வடபகுதிக்கடற்பரப்பெங்கும், குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் என அனைத்துக் கடற்பரப்புக்களிலும் வேற்று நாட்டு மீனவர்களுடைய வருகையும், வளச் சுரண்டல்களும் காணப்படுகின்றன.

இலங்கை அரசும், உரிய அதிகாரிகளும், கடற்படையும் இப்பிரச்சினைக்குரிய தீர்வினை விரைவில் பெற்றுத்தரவேண்டும்.

இல்லையேல் இந்திய மீனவர்களை தடுக்கின்ற செயற்பாட்டை எமது மீனவர்களிடம் கையளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.