கல்முனையில் உள்ள தேநீர்கடைகளை இரவு 8 மணிக்கு முன் மூட தீர்மானம்

download 6 1
download 6 1

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து தேநீர் கடைகளும் தற்காலிகமாக இன்று (16) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இரவு 8.00 மணிக்கு முன்னதாக மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் மற்றும் பிராந்திய தொற்று நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி என்.ஆரிப் ஆகியோர் சந்தித்து, கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மாநகர சபையினால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதன்போது தேநீர் கடைகள் இரவு நேரங்களிலும் திறந்திருப்பதனால், பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இன்று புதன்கிழமை (16) தொடக்கம் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்கரைப் பகுதிகளிலும் கடைத்தெருக்களிலும் மற்றும் பொது இடங்களிலும் கூடி நிற்பதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதுடன் இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.