உங்களால் சிலைகளை உடைக்க முடியுமே தவிர தமிழர்களின் மனங்களை உடைக்க முடியாது- மயூரன்

senthilnadhan 720x450 1
senthilnadhan 720x450 1

உங்களால் சிலைகளை மாத்திரமே உடைக்கமுடியும்.வீறு கொண்டெழும் தமிழர்களின் மனங்களை உடைக்க முடியாது. என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவிடம் நேற்றையதினம் இரவு உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அவர் இன்று அனுப்பிவைத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நினைவு முற்றத்தை இடித்து சிங்கள பேரினவாதம் ஒரு குரூரமான வெறிச்செயலை அரங்கேறியுள்ளது. போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவாலயத்தை அழித்து இலங்கையானது இரக்கமற்ற அரக்கர்களின் கூடாரம் என்பதை உலகிற்கு மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளது. அன்று இரத்தமும் சதையுமாக இருந்த எமது மக்களை கொன்றீர்கள் இன்று அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கற்களை அழிக்கிறீர்கள். உங்களது இரத்தவெறி எப்போது தான் அடங்கப்போகிறது.

இறுதிபோரில் முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை உலகம் அறிந்த உண்மை. உலக வரலாற்றில் முள்ளிவாய்க்கால் என்பது இன அழிப்புப் போரின் நீங்காத அடையாளமாக என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

ஆணையிறவில் இராணுவத்திற்கு நினைவுசிலை வைக்கலாம், கிளிநொச்சியில் போர் நினைவுச்சின்னம் வைக்கலாம், போர் வெற்றிவிழாவை நீங்கள் கொண்டாடலாம் இழந்த உறவுகளை நினைந்துருகுவதற்கு தமிழர்களிற்கு இடமில்லை. இது தான் உங்களின் பௌத்த தர்மம். இதற்காகதான் தமிழர்கள் தனிநாடு கேட்டு போராடினார்கள். மீண்டும் அந்த நிலையை ஏற்ப்படுத்துவதற்காகவா? தமிழர்களை தூண்டுகிறீர்கள்.

கொரோனா வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில் நாடு பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கிறது, தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் உணவின்றி பட்டினியை சந்திக்கின்ற அவசர காலத்தில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையையும், அவர்களது அடையாளங்களையும் நசுக்குகின்ற நாசகார செயற்பாட்டை இரகசியமான முறையில் கோட்டா அரசு இரவோடிரவாக முன்னெடுத்துள்ளது. தமிழர்கள் மீது கோட்டபாயவும் அவரது கைக்கூலிகளும் கொண்டிருந்த அச்சம்  இரவினில் இதனை இடிப்பதற்கு காரணம். கடத்தல்களையும் காணாமல் போதல்களையும் இரவினில் செய்து பழக்கப்பட்ட உங்களிற்கு இதுவெல்லாம் புதியவிடயமல்ல.

உங்களால் சிலைகளை மாத்திரமே உடைக்கமுடியும் .வீறு கொண்டெழும் தமிழர்களின் மனங்களை உடைக்க முடியாது.படுகொலைகளும், அவலங்களும் எத்தனை தலைமுறைகள் தாண்டியும் மக்கள் மனங்களில் நினைவழியா தடமாக இருக்கத்தான் போகின்றது. தமிழர் தாயகம், தேசியம், அவற்றுடன் இணைந்த விடுதலை உணர்வு, எல்லாமே துண்டாடப்பட வேண்டும் எனும் பெரும்பாண்மை வாதக் கருத்தியல் தவிடுபொடியாகும் நாள் வெகுவிரைவில் வரத்தான் போகிறது.

தமிழ் இன எழுச்சியின், ஓர்மையின் அடையாளமாக திகழும் நினைவு முற்றத்தை. அழிக்க எத்தனிக்கும் எதிரிகளின் செயல்களை முறியடிப்பது மானத்தமிழர்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும். தொடரும் இந்த அரசின் அராயகத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டிய கட்டத்திற்கு தமிழ்மக்களும், இளைஞர்களும் முன்வரவேண்டும்.

அனுமதி அற்ற கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள், வடக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் எல்லாம் யாரின் அனுமதியுடன் அமைக்கப்பட்டது. எனவே நினைவு முற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் அது மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும். மீதம் இருக்கின்றவை பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிடில் பாரதூரமான விளைவை கோட்டாபய அரசு சந்திப்பதுடன் மீண்டுமொரு தமிழ்மக்களின் எழுச்சியை இந்த அரசினால் தடுக்க முடியாது என்று குறித்த அறிக்கையில் உள்ளது.