ஒரு இனத்தின் உணர்வை மழுங்கடிப்பதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை – செல்வம்

அடைக்கலநாதன்
அடைக்கலநாதன்

ஒரு இனத்தின் உணர்வை மழுங்கடிப்பதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு இனத்தின் உணர்வை மழுங்கடிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ எந்த உரிமையும் இல்லை.

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடிக்க நினைக்கும் இலங்கை அரசாங்கத்தின் சிந்தனை, ஆயுத போராட்டத்தை ஒழித்து விட்டோம் என்பதாகும்.

அதாவது உலகளவில் பெருமைக்கொள்ளும் வகையில் ஆயுதப் போராட்டத்தை முறியடித்து விட்டோம் என்று மமதையோடு இருப்பது, ஒருபோதும் நல்ல நிலைமையை ஏற்படுத்தாது.

ஆகவே ஆயுதப்போராட்டத்தை ஒழித்ததன் ஊடாக எந்த போராட்டமும் வெடிக்காதென அரசாங்கம் சிந்திப்பது தவறாகும். ஒரு இனத்தை ஒடுக்குவதன் ஊடாக அந்த இனம் கிளர்ந்தெழுகின்றபோது அது போராட்டமாக மாறும்.

ஏற்கனவே எமது தமிழ் இனம் அதனை சந்தித்திருக்கின்றது. ஆகவே இலங்கை அரசாங்கம் மாற்றுச் சிந்தனையுடன் செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.