போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்-சாணக்கியன்

IMG 0092
IMG 0092

போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள எட்டு காவல் நிலையங்களில் இருந்துவந்த காவற்துறை உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

IMG 0090

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் காவல் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகைதந்த காவல் நிலையங்களின் காவற்துறை உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.
வடக்கில் வல்வெட்டித்துறை, கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய காவல் நிலையங்களில் இருந்தும் கிழக்கில் வாழைச்சேனை, மூதூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை ஆகிய காவல் நிலையங்களில் இருந்து வருகைதந்த காவற்துறை உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

IMG 0089

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை மீறப்பட்டதா, பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா, கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் புதிவுசெய்யப்பட்டன.
முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் இவ்வாறு வாக்குமூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகளில் காவற்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையானது இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.