இலங்கை மீது மேற்குலக நாடுகளின் தலையீடுகளை அனுமதிக்க முடியாது – சீனா திட்டவட்டம்

WhatsApp Image 2021 02 26 at 7.29.29 PM
WhatsApp Image 2021 02 26 at 7.29.29 PM

மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள் சில இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது என சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீ தெரிவித்துள்ளார்.

இந்தச் செயற்பாடுகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்த விடயத்தில் இலங்கையின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதற்காக பூரண ஒத்துழைப்பை சீனா வழங்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீ கூறியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று சீன வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவும் இலங்கையும் நீண்ட கால நட்பின் கூட்டுறவு பங்காளிகள் என்றும், இந்த நட்பைத் தொடர்ந்தும் பேண வேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு, மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சவால்களை சமாளிப்பதற்கும் சீனா தனது தன்னலமற்ற உதவிகளை வழங்கி வருகின்றது எனப் பதிலளித்து குறிப்பிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர், சீனாவின் இந்த ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பிரச்சினைகளை எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாமல், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நெருக்கடிக்குள் தள்ளுகின்றன எனவும், இந்த விடயத்தில் சீனா தொடர்ந்து நீதியை நிலைநிறுத்தி வளரும் நாடுகளுடன் நிற்கும் என்று தாம் நம்புவதாகவும் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.