சர்வதேச விசாரணையிலிருந்து இலங்கைப் படையினரைப் பாதுகாக்க விரைவில் புதிய சட்டம் – பீரிஸ் தகவல்

.எல்.பீரிஸ்
.எல்.பீரிஸ்

இலங்கைப் படையினருக்கு எதிரான வெளிநாட்டு விசாரணைகளைத் தடுப்பதற்கும், அவர்களுக்குச் சட்ட ரீதியாக பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான விசேட சட்டங்களை இயற்றுவதற்கு இலங்கை அரசு தயாராகவே உள்ளது என கல்வி அமைச்சரும் சட்டத்துறை நிபுணருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கை பக்கச்சார்பானது என நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். அதை ஏற்றுக்கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சிற்சில திருத்தங்களை முன்வைத்துள்ளது. ஆனால், அதையும் நாம் ஏற்கத் தயாரில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அடிப்படையற்றது, நீதியை நிலைநாட்டும் நோக்கில் தயாரிக்கப்பட்டது அல்ல. மாறாக இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியாகக் கைவைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் கதைக்கப்படுகின்றது. போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளில் உள்ளனர். 12 மற்றும் 14 வயதுகளையுடைய பிள்ளைகளைக் கடத்திச் சென்று, அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளைத் தொங்கவிட்டது யார்? இவை தொடர்பான புகைப்படங்களும் உள்ளன.

சர்வதேச சட்டதிட்டங்களுக்கு இது முரணானது. அவர்கள் தஞ்சமடைந்துள்ள நாடுகளின் சட்டத்துக்கும் முரணானது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருக்கும் சில நாடுகளே இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி, எமது படையினரைக் குறிவைக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள முப்படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணையோ அல்லது வெளிநாடொன்றோ விசாரணை நடத்த முடியாது. அதற்கு ஏற்ற வகையில் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க அரசோ, நீதிமன்றமோ அல்லது அங்குள்ளவர்களோ நேரடியாகவோ மறைமுகமாகவோ விசாரணைக்கு ஒத்துழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகின்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள் எமது நாட்டுக்குள் வருவார்களானால் சிறைப் பிடிக்கப்படுவார்கள் என அமெரிக்கத் தூதுவராக இருந்த ஜோன் பொல்டன் என்பவர் ஐ.நாவில் தெளிவாக இடித்துரைத்தார். பிரிட்டனிலும் படையினருக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பளிக்கும் சட்டம் அமுலில் உள்ளது.

எமது நாட்டிலுள்ள படையினரை இலக்குவைப்பதற்கு, வேட்டையாடுவதற்கு எவராவது முயற்சிப்பார்களானால் அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்குவோம். தற்போதுள்ள சட்டம் அதற்குப் போதுமாக இல்லையெனில் புதிய சட்டங்களை இயற்றுவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது. படையினருக்கு எதிரான போலிக்குற்றச்சாட்டுகளுக்கு முடிவுகட்ட வேண்டியுள்ளது என தெரிவித்தார்.