922 நாட்களை கடந்துள்ள பொத்துவில் கனகர் கிராம மக்களின் மண்மீட்பு போராட்டம்!

IMG 20210302 121952
IMG 20210302 121952

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் 60 ஆம் கட்டை கனகர் கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டம் 922 நாட்களை கடந்துள்ளது.

நாளை இடம்பெறவுள்ள பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் காலாகாலமாக வாழ்ந்து வந்த காணியை மீட்டுத் தருவதற்கான நியாயப்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும் என பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போராட்டக் குழுவின் தலைவி றங்கத்தனா, உறுப்பினர் ராசா ஆகியோர் மிகவும் உருக்கமாக தமது போராட்டம் இவ்வாறு 922 நாட்களையும் தாண்டி இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் விளக்கமாகக் கூறினர்.

அம்பாறைமாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் 60ஆம் கட்டை ஊறணி எனுமிடத்தில் கனகர்கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப் போராட்டம் தொடங்கி 922 ஆவது நாட்களை கடந்து நகர்கின்றது . அவர்கள் கடந்த 2018.08.14 ஆம் திகதி இப்போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 30 வருடங்களாக அங்கு வனபரிபாலன இலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.

எது எப்படியிருந்த போதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடு மண்டிக் காணப்படுகின்றது. அந்தக் காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30 வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும். தகர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிடுகையில் தாங்கள் வாழ்ந்த இடங்களில் மீளவும் குடியமர்த்த பட வேண்டும் என நீண்ட காலமாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்த மக்களுக்கு குடியமர்த்த படும் விடயத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.