தியாகிகள் உயிர் நீப்பதையா சர்வதேசம் விரும்புகிறது?- அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர்!

IMG 7478
IMG 7478

தியாகிகள் உயிர் நீப்பதையா சர்வதேசம் விரும்புகிறது. எமது கண்ணீருக்கு ஐக்கிய நாடுகள் பதில் சொல்ல வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் மு. சக்திவேல் தெரிவித்துள்ளார்கள். இலங்கையை சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் நிறுத்தக்கோரி யாழ் நல்லூர் பகுதியில் இடம்பெற்றுவரும் சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய நீண்ட கால போராட்டமானது அரசியல் சார்ந்தது. இந்த போராட்டத்தை தெற்கின் அரசாங்கம் பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து பல்வேறு அழிவுகளை செய்தது மட்டுமல்லாமல் இன அழிப்பினை மேற்கொண்டதையும் நாம் அனுபவித்துள்ளோம்.

இந்த இன அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும் என கேட்கும் அதே வேளையில் 1987 ஆம் ஆண்டு தியாகி திலீபன் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு தமது பிரச்சனையை தீர்க்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தார் ஆனால் இந்தியா தலைசாய்க்கவில்லை. அதே போல தற்போதும் எமக்கு எதிராகத்தான் உள்ளது. அதே போல சர்வதேச நாடுகளும் எமக்கு எதிராக இருக்கின்றதா என சந்தேகிக்கிறோம். ஏனெனில் தற்போது வெளியாகிய ஐ.நா சபையினுடைய தீர்மானம் எமக்கு சார்பானதாக இல்லை.

இதனால் லண்டனில் அம்பிகை செல்வகுமார் என்ற பெண்மணி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். அவருடைய கோரிக்கைக்கும் அமைவாக சர்வதேசம் நீதியை பெற்றுத்தருமாறு கேட்கிறோம்
எமது தியாகத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடந்த முறை இந்தியா திலீபனின் உயிரை தியாகம் செய்யும் வரை பார்த்துக்கொண்டிருந்தது. அதே போல இம்முறையும் தியாகிகள் மரிக்க வேண்டும் என சர்வதேசம் விரும்புகிறதா இதுவா மனித நீதி.

எமது அரசியல் பயணத்தில் மைல் கல்லை எட்டியுள்ளோம். எனவே அம்பிகை அவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்றால் எமக்கு நீதி வேண்டும். அதை விடுத்து உயிர்நீப்பதை தான் இந்த உலகம் விரும்புகிறது என்றால் அவரின் பின்னால் பலர் வர ஆயத்தமாக உள்ளார்கள்.

நாம் தற்போது மிகவும் வேதனையுடனும் கவலையுடனும் உள்ளோம். எமது கண்ணீருக்கு ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் பதில் சொல்ல வேண்டும் என்றார்.