துறைமுக நகர் இலங்கை மக்களுக்கே சொந்தம்-ஹர்ஷ டி சில்வா

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 9
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 9

துறைமுக நகர அபிவிருத்தியை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கவில்லை. அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தையே எதிர்க்கின்றோம். 2019 , 2020 இல் தயாரிக்கப்பட்ட சட்ட மூலங்களில் கொழும்புதுறை நகரில் அரசாங்கத்திற்கும் உரிமை காணப்பட்டது.

எனினும் தற்போதைய சட்ட மூலத்தில் அது நீக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரின் உரிமையாளர்கள் இலங்கை மக்களாகவே இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநாட்டவர்களாகக் கூடும் என்று ஜனாதிபதியின் சட்டத்தரணி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற ஆணைக்குழுக்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகும். துறைமுக நகரம் தொடர்பான சகல அதிகாரங்களும் இந்த ஆணைக்குழுவிற்கே உரித்தானதாகும். ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பத்திற்கமையவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்படும்.

2019 இல் இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்ட மூலத்தில் அரச பதவி வகிக்கின்ற அதிகாரிகளே இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடு காணப்பட்டது.

மத்திய வங்கி ஆளுனர் , நிதி அமைச்சின் செயலாளர் , துறைமுக நகர் உள்ளடங்கும் அமைச்சின் செயலாளர் , நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், முதலீட்டுசபை தலைவர் மற்றும் அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கும் மூவர் அந்த உறுப்பினர்களாகக் காணப்பட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனையடுத்து 2020 ஜூன் மாதத்தில் தயாரிக்கப்பட்ட சட்ட மூலத்தில் மேற் கூறப்பட்ட அரச பதவி வகிக்கும் 5 அதிகாரிகளுக்கு மேலதிகமாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தலைவர் உள்ளிட்ட இருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு காணப்படும் அதிகாரம் மேலும் வலுப்படும்.

இந்த ஆணைக்குழுவிற்கென நிதி காணப்பட வேண்டும். இதனை ஆரம்பிப்பதற்கான 400 மில்லியன் ரூபா நிதியை வெளிநாட்டு நிறுவனமொன்றே வழங்கும் என்று தற்போதைய சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2019 சட்ட மூலத்தில் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு அரசாங்கத்தின் ஊடாக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2020 சட்ட மூலத்தில் நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டு அரசாங்கத்தின் ஊடாகவும் , அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாகவும் இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சட்டமூலத்தில் அரசாங்கம் நீக்கப்பட்டு அபிவிருத்தி நிறுவனம் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் இதன் உரிமையாளர் யார் என்ற பிரச்சினை எழுகிறது. இதன் சட்டமூலம் முதலீட்டு சபை சட்டத்திற்குட்பட்டதாக காணப்பட வேண்டும். இந்த நிபந்தனைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி உள்ளிட்டவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

துறைமுக நகர அபிவிருத்தியை நாம் எதிர்க்கவில்லை. அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தையே நாம் எதிர்க்கின்றோம். முன்னைய சட்ட மூலங்களில் இதில் அரசாங்கத்திற்கும் உரிமை காணப்பட்டது. எனினும் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் உரிமையாளர்கள் இலங்கை மக்களாகவே இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.