தடுப்பூசிகளைப் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவே வேண்டாம்- அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வலியுறுத்து!

image 2021 05 30 194920
image 2021 05 30 194920

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும், இவ்வாறு பெற்றுக்கொள்வது ஆபத்தானது எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் இதுவரை எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அவ்வாறு தடுப்பூசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கும்படியும் அதன் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்கி வரும் நிலையில், அதனை நாட்டில் எவருக்கும் விற்பனை செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு வழங்குபவர்களுக்கு எதிராக கொரோனாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஓரிரு மாதங்களில் நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பதற்றம் அடைந்து உறுதிப்படுத்தப்படாத தடுப்பூசிகளைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மேலும் வலியுறுத்தியுள்ளார்.