இருண்ட யுகத்தை நோக்கி நாட்டின் பொருளாதாரம் – ரணில் எச்சரிக்கை

images 11
images 11

இலங்கையின் தேசிய பொருளாதாரம் ஒரு இருண்ட யுகத்தை நோக்கி செல்கின்றது.

ஜி.எஸ்.பி. போன்ற சலுகைகள் இல்லாமல் போனால் பூச்சிய நிலைக்கு இலங்கை தள்ளப்படும்.

எனவே அரசாங்கம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புக்களைப் பெற்று பொருளாதார பின்னடைவுகளிலிருந்து மீண்டெழ கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

சமூக ஆர்வலர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இணையவழியூடான கலந்துரையாடலின் போது இவ்வாறு ஆலோசனை வழங்கிய ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில் ,

நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான காரணம் குறித்து பலரும் என்னிடம் வினவுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு செல்ல நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று பலராலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.

நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் காணப்படுகிறது. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. நாம் நினைத்ததை விட அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் நாளொன்றில் நூறு மரணங்களும் பதிவாகியுள்ளன. நாம் தெரிந்து கொண்டுள்ள எண்ணிக்கைக்கும் அப்பால் தெரியாமல் கொவிட் தொற்றுக்கு உள்ளான பலர் இருக்கலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். எனது பிரதான நோக்கம் இதுவேயாகும்.

அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட புகழ் இவ்வளவு விரைவாக வீழ்ச்சியடைந்தமையை இதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை.

அரசாங்கம் இவ்வாறு அதன் புகழை இழந்துள்ள போதிலும் , நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி இதுவரையிலும் அதற்கான மாற்று வழியொன்றை பரிந்துரைக்கவில்லை.

இது மிகவும் அபாயமான நிலைமையாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாடு எவ்வாறு முன்னேற முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

இதுபோன்ற அரசியல் பின்னணியை இதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. மறைந்த பிரதமர் தஹநாயக்க அரசியல் நெருக்கடிகள் காணப்பட்டாலும் நாட்டை சிறந்த முறையில் நிர்வகித்துச் சென்றார்.

ஆனால் தற்போது அரசியலில் மாத்திரமின்றி நாட்டிலும் நெருக்கடிகள் உள்ளன. எனவே எதிர்காலத்தில் என்னவாகும் என்பதை என்னாலும் கூற முடியாது. எனவே நாம் நாடாளுமன்றத்திற்கு சென்று அதிலிருந்து சிறந்தவொரு வழியில் பயணிக்க முடியும்.

2009 க்குப் பிறகு புதிய பரிமாற்றங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி நாம் சிந்திக்கவில்லை. அதற்கு பதிலாக நாம் வெளிநாட்டு கடன்களைப் பெறத் தொடங்கினோம்.

டொலர் மற்றும் யென்களில் இவ்வாறு கடன் பெற்றுள்ளோம். இதன் போது நாம் பெற்றுக் கொண்ட கடன் தொகை அதிகரித்தது. அதற்கு முன்னர் எமது வணிகக் கடன் ரூபாய்களிலேயே காணப்பட்டது. டொலர் மற்றும் யென்களின் பெற்றுக் கொண்ட கடன் தொகை மிகக் குறைவாகவே காணப்பட்டது.

தற்போது எமக்கு வணிக வட்டிக்கு கடன் செலுத்த வேண்டியுள்ளது. 2014 இன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை தொடர முடியாமல் போனமைக்கான காரணம் இந்த பிரச்சினையாகும்.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டாகும் போது பொருளாதாரம் சரிவடையும் என்று அவர்கள் தெரிந்து கொண்டனர். அதன் காரணமாகவே 2014 இல் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த கடனை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நான் பொருளாதார முகாமைத்துவத்திற்கே முன்னுரிமையளித்தேன். பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி 2017 முதன்மை வரவு – செலவு திட்டத்தின் ஊடாக எம்மால் மேலேழ முடிந்தது. வெளிநாட்டு கடன்களை செலுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு காணப்பட்டது.

நாம் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வருமான வரியையும் அதிகரித்துக் கொண்டோம். இது நாட்டுக்கு நன்மையளித்ததோடு , 2019ஆகும் போது ஸ்திரமானதொரு செல்லவதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

எனினும் 2019 இல் எமக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டன. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இதற்கு முக்கிய காரணியாகும். எனினும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதமாகும் போது மீண்டும் எம்மால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்தது. 2020 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வருமான வரி மற்றும் வற் வரி என்பன குறைக்கப்பட்டன. இதனால் அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்தது. வரி குறைப்புக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

எமது பொருளாதாரம் ஐரோப்பிய பொருளாதாரத்தை விட வேறுபட்டது. அதனால் எமது வருமானம் குறைவடைந்தது. 2020 மார்ச் மாதமாகும் போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்திருந்தது.

கொவிட் பரவல் ஏற்பட முன்னரே இந்த நிலைமை காணப்பட்டது. கொவிட் நெருக்கடியின் பின்னர் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடைந்தது.

தற்போது எமக்கு கடன் பெற்றுக் கொள்வது சிரமமாகும். அந்நிய செலாவணியும் குறைவடைந்துள்ளது. அரசாங்கத்தால் கடன் பெற முடியாததால் அரசாங்கத்தின் பிணைமுறிகளை தனியார் வங்கிகளை கொள்வனவு செய்யுமாறு கோரப்படுகிறது.

டொலர் பிணைமுறிகளைப் பெற தனியார் வங்கிகளிடம் மீண்டும் கடன் பெறவேண்டியுள்ளது. இதனால் எமது வங்கிகள் சரிவடையக் கூடும்.

கொரோனா காரணமாக கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமை மற்றும் பிணைமுறிகளுக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்கள் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.

நாட்டின் வருமானம் குறைவடைந்துள்ளமையால் நாணயத்தாள்களை அச்சிடுகின்றனர். இவ்வாறு நாணயத்தாள்களை அச்சிடும் போது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது. எரிபொருள் விலை அதிகரித்தமை இதன் பிரதிபலனேயாகும்.

கடந்த ஆண்டு எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 30 டொலர்களாக குறைவடைந்த போதிலும் அதன் பயனை மக்களுக்கு வழங்கவில்லை.

அந்த பணத்தை கடன் செலுத்துவதற்கு பயன்படுத்தினர். கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு தற்போது நாட்டில் இருப்பு இல்லை. அதனால் பங்களாதேஷிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்லப் போகின்றோம் என்ற பிரச்சினை உருவாகியுள்ளது.

கொவிட் தொற்றால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பல நாடுகள் உள்ளன. அவ்வாறான நாடுகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதால் அவற்றுக்கு நிதியுதவி கிடைக்கப் பெறுகிறது.

ஆபிரிக்கா நாடுகள் பலவற்றுக்கும் 50 – 60 கோடி டொலர் நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளன. எமது நாட்டுக்கு 100 கோடி டொலர் தேவையாகவுள்ளது.

அந்த நிதியை சீனா அல்லது வேறு நாடுகள் தறுவதாகக் கூறினாலும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. சீனா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதம் இருந்தால் மாத்திரமே பணத்தை வழங்குகின்றன.

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு பல விசேட நிபுணர்கள் பங்களாதேஷ் ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவித்தனர். இலங்கைக்கு இந்த கடனை மீள செலுத்த முடியாது என்று கூறியே அவர்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டனர். இது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும்.

அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டின் எதிர்காலம் இருண்டதாகவே தெரிகிறது. நாம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து முன்னேற வேண்டும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கு எம்மிடம் பணம் காணப்படவில்லை. அஸ்ட்ராசெனிகா, பைசர், மொடர்னா உள்ளிட்ட தடுப்பூகள் காணப்படுகின்றன.

பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் உள்ளிட்ட நாடுகள் கூட தடுப்பூசிகளுக்காக பணம் செலுத்திய போதிலும் இலங்கையிடம் அதனை செலுத்த முடியவில்லை. காணப்பட்ட பிரதான பிரச்சினை இதுவேயாகும்.

தற்போது நாம் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இறுகியுள்ளோம். இந்த வருட இறுதிக்குள் மீள செலுத்த வேண்டிய கடனையும் எம்மால் செலுத்த முடியாமல் போகும்.

அத்தோடு வருமானம் அற்றுப்போயுள்ளது. அந்நிய செலாவணி இருப்பும் குறைவடைந்துள்ளது. நாணயத்தாள்களை அச்சிட வேண்டியேற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை தீரக்க முடியாமல் போகும். நாளுக்கு நாள் இந்த நெருக்கடிகள் அதிகரிக்குமே தவிர அதனை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.

இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எமக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை நீக்கப்பட்டது. 2017 இல் நாம் மீண்டும் அதனைப் பெற்றுக் கொண்டோம். ஐரோப்பிய நாடுகளுடன் நாம் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம்.

நாம் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கும் சென்றோம். அவர்கள் எதிர்பார்ப்பது ஐரோப்பிய சங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என்பதையும் , ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதையாகும்.

நாம் 1978 ஆம் ஆண்டிலேயே பயங்கரவாத தடை சட்டத்தை நிறைவேற்றினோம். அவை தற்போது வழக்கத்தில் இல்லாமையால் புதிய சட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது.

பயங்கரவாத சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட முன்னர் அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கால எல்லை குறைவானதாகக் காணப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இவை தற்போது தவறாக பயன்படுத்தப்படுகின்றன.

இதன் கீழ் பலரும் கைது செய்யப்படுகின்றனர். அரசாங்கத்தை தூற்றினாலும் கைது செய்கின்றனர். இவையே நாட்டுக்கு பிரச்சினையாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய நிபந்தனைகளுக்கமைய நாம் செயற்படவில்லை. அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளால் எமக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பது ஐக்கிய நாடுகள் சபை அமர்வின் போது தெளிவாக தென்பட்டது.

அன்று வடகொரியாவை புகழ்கின்றோம் என்றால் இன்னும் நாம் எதை எதிர்பார்க்கின்றோம் ? இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும் வடகொரியாவை பாராட்டியதில்லை.

கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறானதொரு பிரச்சினை தோற்றம்பெறவில்லை. எமக்கு எதிராக புதிதாக வழக்கு தொடரப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி தொடர்பான வழக்குகள் மாத்திரமே எஞ்சியிருந்தன. இந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்திக் கொண்டு நாம் முன்னோக்கி பயணித்தோம்.

வடக்கு மக்களுக்கு இழப்பீட்டினை வழங்குதல் , காணாமல் போனோர் பற்றிய பிரச்சினைகள், யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்டவை தொடர்பில் நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

ஆனால் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுபவர்கள் பயங்கரவாத தடை சட்ட்தின் கீழ் கைதுசெய்யபபட்டு முடக்கப்படுகிறார்கள்.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் எமக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை அற்றுப்போகும். அது ஆடை தொழிற்துறைக்கு பாரிய பாதகத்தை ஏற்படுத்தும்.

அத்தோடு எமது ஏற்றுமதியும் குறைவடையும். கொவிட் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையும் நீங்குமாயின் பாரதூரமான பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்றார்.