அரசியல் கைதிகள் தொடர்பில் நாமலின் கருத்தை வரவேற்கிறோம் – கோவிந்தன் கருணாகரம்

DSCN1810
DSCN1810

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கருத்து காலம் கடந்த ஞானம் என்றாலும் நாங்கள் அதனை வரவேற்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையிலே மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய சபை அமர்விலே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்வது, நீண்டகாலம் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் எமது உறவுகளான அரசியற் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான அறிக்கையினை விட்டிருந்தார். இது மிகவும் சந்தோசமான விடயம். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.

இந்த விடயத்தை நீங்கள் எப்போதோ செய்திருக்க வேண்டும். 2009களிலே பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை புனர்வாழ்வளித்ததாகவும், அவர்களில் சுமார் மூவாயிரத்து ஐநூறு பேருக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறும் நீங்கள் ஒரு சில நூற்றுக்கணக்கான போராளிகளை முப்பது நாற்பது ஆண்டுகளாக சிறையில் வைத்திருந்ததைப் பற்றி ஏற்கனவே சிந்தித்திருக்க வேண்டும்.

இன்று ஜி.எஸ்.பி வரிச்சலுகை, அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் அறிக்கை என்பன போன்ற சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இவற்றை நீங்கள் கையில் எடுக்கின்றீர்கள். இருந்தாலும் காலம் கடந்த ஞானம் என்பது போல நாங்கள் அதனை வரவேற்கின்றோம்.

நீண்ட காலமாகச் சிறையில் இருந்தவர்கள் மாத்திரமல்லாமல் கடந்த காலங்களிலே முகநூல்கள் போன்ற சமூக வலைதளங்கள் ஊடக தகவல்களைப் பதிவு செய்தார்கள் என்பதற்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீங்கள் மீள்பரிசீலனை செய்யாமல் அதனை முழுமையாக இல்லாமல் செய்தால் தான் இந்த நாடு சுபீட்சம் அடையும் என தெரிவித்துள்ளார்.