உயர்கல்வியை இராணுவ மயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது – சாணக்கியன்

Shanakiyan MP
Shanakiyan MP

உயர்கல்வி துறையை இராணுவ மயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய அவர், இராணுவத்துக்கான பயிற்சிகளையும், கற்கைகளையும் வழங்குவதில் தங்களுக்குப் பிரச்சினை இல்லை எனவும் ஆனால் இதன் ஊடாக பொதுமக்களது உயர்கல்வி திட்டம் இராணுவமயமாக்கப்படுகின்றமையையே எதிர்ப்பதாகக் கூறினார்.

இவ்வாறு பல கல்லூரிகள் அமைக்கப்பட்டு அவை பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.

அதேநேரம், உள்நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில், இராணுவம் யாருடன் சண்டையிடுவதற்காகப் பலப்படுத்தப்படுகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

வெளிநாட்டு சக்திகளுடன் தான் இராணுவம் சண்டையிடப் போகிறது என்றால், கடலோரப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அவர் உரையாற்றும் போது ஆளுந்தரப்பில் சிலர் அவருக்கு எதிராகத் தகாத வார்த்தையைப் பிரயோகித்திருந்த நிலையில், அதனை நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, ஜோன்கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் ஊடாக, அரசாங்கம் சமூகத்திலுள்ள சாதாரண மக்களுக்கும் இராணுவச் சிந்தனையை ஊட்ட முயல்வதாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சாதாரண பல்கலைக்கழகங்களின் சித்தாந்தம் வேறு.

சுதந்திர சிந்தனைக்கு பொதுவான பல்கலைக்கழகங்களில் இடமளிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இராணுவம் என்பது சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டது.

பாதுகாப்பு பல்கலைக்கழகங்களில் இராணுவத்துக்கே உரியச் சிந்தனைகளே விதைக்கப்படும்.

ஆனால் சமூகத்தில் சுதந்திர சிந்தனையே விதைக்கப்பட வேண்டும்.

அரசாங்கம், இந்த சட்ட மூலத்தின் ஊடாக, ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரியை விரிவுபடுத்தி, இராணுவத்தில் தொழில் வாய்ப்பினை கூடப் பெற விரும்பாத சாதாரண மக்களையும், உள்ளீர்க்க வகை செய்கிறது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.