அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

103580776 srilanka maithiripalasirisena 1

தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடொன்றை வளர்ச்சி பாதையில் இட்டு செல்வதற்காக, குறுகியகால, மத்திய மற்றும் நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் நாட்டை நிர்வகித்த எந்த அரசாங்கங்களினாலும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கவில்லை என்றும் மைத்ரிபால சிறிசேன கூறினார்.

வெளிநாட்டு உறவுகள், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்பம் போன்ற விடயங்களுக்காக தேசிய கொள்கை வகுக்கப்படுவதைப் போன்று அதற்கான இணக்கப்பாடும் ஏற்படுத்தி கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.