முதுகெலும்புள்ள ஆளுந்தரப்புப் பிரதிநிதிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் – சஜித்

Sajith.Premadasa.7 1
Sajith.Premadasa.7 1

அண்மைக்காலத்தில் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டே அரசாங்கத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு ஒன்றைக்கூறவிரும்புகிறோம்.

முதுகெலும்பு இருந்தால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி அதன் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கு அவர்கள் முன்வரவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் அனைத்துத்துறைகளிலும் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதை மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் நிர்வாகப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதனைத் திறம்பட முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுத்திருக்கின்ற நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்குரிய வேலைத்திட்டம் எம்வசமுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாராமவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் திங்கட்கிழமை (18 ) நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் அங்கு மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியதிலிருந்து நாட்டுமக்கள் பலவிதங்களிலும் அர்ப்பணிப்புக்களைச் செய்திருக்கின்றார்கள்.

அண்மைக்காலத்தில் அவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். ஆரம்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தம்வசம் போதியளவு அதிகாரங்கள் இல்லையென்று கூறிய ஆட்சியாளர்கள், 

அதற்கென அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்டதுடன் மேலும் பல புதிய அதிகாரங்களையும் உருவாக்கிக்கொண்டார்கள்.

இருப்பினும் அதனூடாக மக்களுக்குரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. மாறாக அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளடங்கலாக அனைத்து அத்தியாவசியப்பொருட்களின் விலைகளும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை நம்பி ஜனாதிபதித்தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் வாக்களித்த மக்களுக்கு அரசாங்கம் இப்போது தலைவலியைக் கொடுத்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி பலவருடகாலத்தின் பின்னர் நாட்டில் மீண்டும் வரிசைகளில் நிற்கும் யுகத்தை அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது.

அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வசதி வாய்ப்புக்களுடன் சொகுசாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களித்த மக்களே அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள்.

மறுபுறம் நாட்டின் தேசிய சொத்துக்களை அரசாங்கம் போட்டிபோட்டுக்கொண்டு வெளிநாடுகளுக்கு வழங்கிவருகின்றது. நாட்டுமக்களுக்குச் சொந்தமான பொதுவளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்ற உலகப்பிரபலம்பெற்ற ஏலவிற்பனை நிறுவனமாக அரசாங்கம் மாறியிருக்கின்றது.

நாட்டின் நிர்வாகத்தை சீராக முன்னெடுக்கமுடியாத சந்தர்ப்பங்களில் இன, மதரீதியிலான பிரிவினைவாதம் தூண்டப்படுகின்றது. மறுபுறம் எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைகின்ற பிறநாட்டு மீனவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, எமது மீன்வளத்தையும் கொள்ளையடித்துச்செல்கின்றார்கள்.

குறைந்தபட்சம் இப்பிரச்சினைக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுத்து எமது மீனவர்களைப் பாதுகாப்பதற்குக்கூட அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. உரப்பற்றாக்குறை காரணமாக விவசாயத்துறை முழுமையாகச் சீர்குலைந்திருக்கின்றது.

அதேவேளை நாளாந்தம் புதிது புதிதாகப் பணத்தை அச்சடிக்கின்ற மத்திய நிலையமாக மத்திய வங்கி மாறியிருக்கின்றது. இதன்விளைவாக முன்னொருபோதுமில்லாத வகையிலான பணவீக்கம் ஏற்பட்டு, ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும்.

அதனால் தற்போது காணப்படுவதை விடவும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதுடன் மக்களில் வாழ்க்கைச்செலவிலும் பாரிய அதிகரிப்பு ஏற்படும். எனவே ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அனைத்துத்துறைகளிலும் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதை மக்கள் நன்கு உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே தகுதிவாய்ந்தவர்களிடம் நாட்டின் நிர்வாகப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ளுமாறு அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டே அரசாங்கத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு ஒன்றைக்கூறவிரும்புகிறோம்.

அவர்களுக்கு முதுகெலும்பு இருக்குமேயானால், அரசாங்கத்திலிருந்து வெளியேறி அதன் செயற்பாடுகளை விமர்சிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் நிர்வாகப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதனைத் திறம்பட முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுத்திருக்கின்ற நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்குரிய வேலைத்திட்டம் எம்வசமுள்ளது. தற்போதைய அரசாங்கம் அவ்வப்போது தோன்றுகின்றவாறு செயற்படுகின்றதே தவிர, அதனிடம் நாடு குறித்த தூரநோக்கு சிந்தனையோ அல்லது உரியவாறான திட்டமிடலோ இல்லை என்று குறிப்பிட்டார்.