பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க புதிய சட்டம்!

Nimal.Siripala.Desilva
Nimal.Siripala.Desilva

தொழிலாளர் ஆலோசனை சபைக்கு அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளை அழைத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலம் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க, ஆகக்குறைந்த வேதனம் தொடர்பான சட்டத்தை திருத்தம் செய்து, ஆயிரம் ரூபாவை அதற்குள் கட்டாயமானதாக கொண்டுவர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்று சபையில் யோசனை முன்வைத்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும்போது, ஆகக்குறைந்த வேதனம் தொடர்பான சட்டத்தை திருத்தம் செய்யுமாறு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம்.

நாடாளுமன்றில் அனைத்து உறுப்பினர்களினதும் விருப்பத்தை அதற்கு பெறமுடியும்.

அதனைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், அது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட சட்டமாகும்.

எவராலும், நீதிமன்றத்திற்கு சென்று அதனை சவாலுக்கு உட்படுத்த முடியாது.

ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்க அனைவரும் கடப்பாடுடையவர்களாவர்.

ஆனால், நீங்கள் முழுமையாக ஏமாற்று வேலையை செய்தீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வேதன நிர்ணய சபையை திருத்தம் செய்து, அங்கு ஆயிரம் ரூபாவை கொண்டுசென்றீர்கள்.

நிறுவனங்கள் தரப்பு இதற்காக நிச்சயமாக நீதிமன்றத்தை நாடும் என்றும், அவ்வாறு நீதிமன்றை நாடிய பின்னர் இந்த ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என்றும் தாங்கள் கூறியதாகவும், அதுவே தற்போது நடந்துள்ளதெனவும் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதனம் அதிகரிக்கப்பட்டதாக பேரிகையாக கூறினர். ஆனால், அது நடைமுறையாகவில்லை. முதலாளிமார் நீதிமன்றத்தை நாடினர். தற்போது வழக்கு இடம்பெறுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களை ஒருபுறம் வைத்தாலும், அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களில்கூட ஆயிரம் ரூபா வழங்கப்படுவதில்லை. இது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, நாளைய தினம் முன்வைக்கப்படவுள்ள பாதீட்டில், அடுத்த ஆண்டில் இருந்தாவது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதனத்தை அதிகரிக்க, ஆகக்குறைந்த வேதனம் தொடர்பான சட்டத்தை திருத்தம் செய்து, ஆயிரம் ரூபாவை அதற்குள் கொண்டுவந்தால், அப்போது வேதன நிர்ணய சபை பிரச்சினை ஏற்படாது.

ஆயிரம் ரூபாவை அந்த சட்டத்திற்குள் கட்டாயமானதாக கொண்டுவாருங்கள். இதனூடாக, தேயிலை, இறப்பர் உட்பட அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆயிரம் ரூபா வேதனத்தை நிச்சயமாக பெற்றுக்கொள்ள முடியும். அதனை செலுத்தாமலிருக்க முடியாது.

எனவே, இந்தப் பாதீட்டிலாவது, நாட்டு மக்களுக்கு வாக்குறுதியாக வழங்கி, அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்திற்கு அந்த சட்டத்தைக் கொண்டுவாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் வலியுறுத்தினார்.

இதேவேளை, விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தை அறவிடுவது, கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியே தவிர, அது சட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளீர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

இவ்வாறாக அதனை அறிவிட்டு வழங்க தொழில் தருநர்கள் கடப்பாடுடையவர்கள் அல்ல என உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்றுள்ளது. இந்த நிலையில், எதிர்காலத்தில் அந்த விடயத்தில் திருத்தமொன்றைக் கொண்டுவர உள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்க, குறுகிய மார்க்கத்தின்மூலம், வேதன நிர்ணய சட்டத்தின்கீழ் இந்த உத்தரவைக் கொண்டுவர உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதனை சவாலுக்கு உட்படுத்த தடை உத்தரவு ஒன்று இல்லாதமையால், இந்தக் கொடுப்பனவை வழங்க தொழில் தருநர்கள் கடப்பாடுடையவர்களாவர். அது வழங்கப்படாமை தொடர்பில், முறையிட்டால், தொழில் திணைக்களத்தின் மூலம் வழக்கு தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேநேரம், இது குறித்து அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் தாம் வினவியபோது, அரசாங்க பெருந்தோட்டங்களில் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படுவதாக அவர் கூறினார் என்றும் தொழில் அமைச்சர் தெரிவித்தார்.

அரச தோட்டங்களில் செலுத்தப்படாவிட்டால், அது குறித்து தொழில் திணைக்களத்திற்கு முறையிட்டால், நிறுவனம் எது என்று பாராமல், தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்வைத்த ஆகக்குறைந்த வேதன சட்டத் திருத்த யோசனை குறித்தும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.

ஆகக்குறைந்த வேதன சட்டத்தை திருத்தம் செய்தால், ஒவ்வொரு தொழில்துறைக்கும் ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்க வேண்டும்.

இதன்போது பெருமளவான கைத்தொழில் துறைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனினும், வழக்கில் கிடைக்கும் தீர்ப்பு எவ்வாறானது என்று பார்ப்போம் என தொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர், தொழிலாளர் ஆலோசனை சபைக்கு அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளை அழைத்து, விரிவான பேச்சுவர்த்தையை நடத்தி, புதிய சட்டம் அவசியமாயின், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்து உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரவித்தார்.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் முன்வைத்த தொழிலாளர்களுக்கான இழப்பீடு குறித்தும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.

சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் தொழிலாளர்களைத் தாக்கும்போது, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

அவரின் கருத்து மிகவும் முக்கியமானதாகும்.

தொழிலாளர்களுக்கான இழப்பீடு குறித்து தாம் ஆராய்வதாகவும், கருத்துக்களை உள்வாங்கி, அவசியமான சட்டத்திட்டங்களைக் கொண்டுவருவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.