அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பு – நிதி அமைச்சர்

pasil
pasil

அரச சேவையில் ஓய்வுபெரும் வயதெல்லையை  65 வயதுவரை நீடிப்பதாகவும், இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது எனவும் வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை மாதத்திற்கு ஐந்து லீட்டரால் குறைக்கவும், தொலைபேசி கொடுப்பனவுகளை 25 வீதத்தால் குறைக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் 76 ஆவது வரவுசெலவுத்திட்டத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாவது வரவு செலவு திட்டத்தையும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

 கொரோனா வைரஸ் தொற்றில் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பூகோள சவால்கள் என சகல விதத்திலும் நாம் சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம், 500 பில்லியனுக்கும் அதிகமான  ரூபா வருமானம் இழந்த நாடாக உள்ளோம். மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நாடாக மாற்றம் கொண்டுள்ளோம், எனினும் சகல சவால்களையும் வெற்றி கொள்ளும் திறம் எம்மிடத்தில் உள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும், இந்த நாட்டில் அடிப்படைவாதம், பயங்கரவாததிற்கு இனியும் இடமில்லை.  கொவிட் சவால்களை வெற்றிகொள்ளவும், மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த நாட்டை நீண்ட காலம் முடக்க நேர்ந்தது. மூன்றாம் அலையை தடுக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க நேர்ந்தது.

ஆசிய கண்டத்தின் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நாடாகவே இலங்கையை பலர் அடையாளபடுத்துகின்றனர்.  ஆசிய வலயத்தின் ஏனைய நாடுகளை விடவும் எம்மால் விரைவாக மீழ்ச்சி காண முடியும் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் உள்ளது.

எனினும் சர்வதேச போதைப்பொருள் மாபியாக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி இன்றும் பலமாக முன்னெடுக்கப்படுகின்றது. இளைஞர்களே இதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல்  வியாபார மாபியா, மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளனர். இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.

உற்பத்தி பொருளாதாரத்திற்கு முன்னுரிமையும், நாட்டில் பொருளாதரத்தை உற்பத்தி பொருளாதாரத்தின் பக்கம் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் அவசியமாகின்றது. இந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலமாக கிடைத்த 5 பில்லியன் ரூபா கிடைக்காது போயுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலமாக கிடைக்க வேண்டிய நிதியும் குறைவடைந்துள்ளது. கடன் நெருக்கடி, முழு வருமானத்திற்கு சமமான படு கடனில் விழுந்துள்ளோம்.  வரவு செலவு திட்டத்தின் அதிக செலவு கடன்களுக்கான வட்டியை செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன் நெருக்கடிக்கு மத்தியிலும் 2 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் இரண்டினை செலுத்தியுள்ளோம்.  2018 ஏப்ரல் 2019 யூலை வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை எமக்கு சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி தொழிற்சாலைகளை மீண்டும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சௌபாக்கிய நோக்கு திட்டத்தில் அதற்கான பரந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவருக்கான எடுத்துக்காட்டாக உள்ளார். வரவு -செலவு திட்டத்தில் அதற்கான சிறந்த வெளிப்பாடு ஏற்பட்டுள்ளது. 

2022 வரவு செலவு திட்டத்தை உருவாக்கும் வேளையில் சௌபாக்கிய  நோக்கு திட்டத்தை முழுமையாக கவனத்தில் கொண்டே வரையப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை மாதத்திற்கு ஐந்து லீட்டரால் குறைக்கவும், தொலைபேசி செலவை 25 வீதத்தால் குறைக்கவும், மின்சாரத்தை சூரிய கலத்தினால் நிரப்பவும் யோசனை ஒன்றினை முன்வைக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள 5 ஆண்டுகள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால் போதும் என்ற யோசனையை 10 ஆண்டுகளாக அதிகரிக்க யோசனை, ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட சகல துறைகளுக்கும் இது பொருந்தும். 

அதேபோல் அரச சேவையில் ஓய்வு பெரும் வயதெல்லை 65 வயதுவரை நீடிப்பு, இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது.