வரவு – செலவு திட்டத்தை கடந்த காலங்களுடன் ஒப்பிடுவது நியாயம் இல்லை – அமைச்சர் டலஸ்

dallus
dallus

வரவு செலவு திட்டத்தை கடந்த காலத்துடன் ஒப்பிடாமல் தற்காலத்தின் நிலைமையுடன் ஒப்பிட்டுபார்க்கவேண்டும்.

இவ்வாறு இல்லாமல் ஒருவருக்கொருவர் விரல் நீட்டிக்கொள்வதால் எந்த பயனும் இல்லை.

அதனால் குறைபாடுகளை திருத்திக்கொண்டு நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலமே எதிர்காலத்தை வெற்றிகொள்ள முடியும்.

அவ்வாறு இல்லாவிட்டால் நாங்கள் மேலும் வீழ்ச்சிப்பாதைக்கே செல்வோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலக தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் அதில் குறைபாடுகள் இருக்கலாம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதன் குறைகளை விமர்சிக்கவேண்டும் அதனால் கடந்த காலங்களுடன் இந்த வரவு செலவு திட்டத்தை ஒப்பிடமுடியாது.

தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரம், கல்வியை மீள கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.

மேலும் ஒரு நாட்டை சர்வதேச ரீதியில் அளவிடுவதற்கு பல அளவுகோள்கள் இருக்கின்றன.

அதில் ஒன்றுதான் வெளிநாடுகளுக்கு செல்லும் கடவுச்சீட்டுகளை தரப்படுத்தலாகும். இவ்வாறு தரப்படுத்தலில் எமது நாடு இருப்பது கீழ் மட்டத்தில் இருந்து 10ஆவது இடத்திலாகும்.

எமது நாட்டுக்கு கீழ் இருப்பது 17நாடுகளாகும். அத்துடன் எமது நாட்டு பிரஜைகளுக்கு விசா இல்லாமல் 41நாடுகளுக்கே சுற்றுலா செல்ல முடியும். அதிலும் அவிருத்தியடைந்த நாடு என இருப்பது சிங்கப்பூர் மாத்திரமாகும்.

எமது நாட்டின் எந்த பிரஜைக்கும் விசா இல்லாமல் வேறு எந்த அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் செல்ல முடியாது. இதுதான் எமது நாட்டின் நிலை. அதேபோன்று கடவுச்சீட் தரப்படுத்தலில் முதல் மூன்று இடங்களில் இருப்பது ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவாகும். இந்த நாடுகளின் பிரஜைகளுக்கு மாத்திரமே உலகில் இருக்கும் 191நாடுகளுக்கு விசா இல்லாமல் சுற்றுலா செல்ல முடியுமாக இருக்கின்றது.

எமது நாட்டைவிட கீழ் மட்டத்தில் இருந்த சிங்கப்பூர், கொரியா பாேன்ற நாடுகளுக்கு சர்வதேச ரீதியில் முன்னேற முடியுமானால் ஏன் எமக்கு முடியாமல்போனது. அதற்கு யார் பொறுப்புக்கூறவேண்டும்.

இதற்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் பொறுப்பாகும். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலாவது அந்த பிரச்சினையை இனம் காணவேண்டும். அதன் பிரன்னர் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த பிரச்சினைகளில் இருந்து மீள எங்களால் முடியும் அதற்காக நாங்கள் அனைவரும் எமது நாட்டின் தேசிய பொருளாதாரம் தேசிய கல்வியின் நிகழ்ச்சி நிரலுடன் இணைந்து செயற்படவேண்டும்.

மேலும் கொவிட் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது எமது சிறுவர்களின் கல்வியாகும். இவ்வாறான நிலையில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு போராட்டம் காரணமாக மேலும் அந்த சிறுவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது,

அதனால் 24வருடங்களாக இருந்துவந்த ஆசிரியர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த வரவு செலவு திட்டத்தில் 30பில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

எதிர்காலத்திலும் இவ்வாறான பிரச்சினை ஏற்படாமல் இதற்கு நிலையான தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.

அத்துடன் நாட்டில் 4மில்லியன் மாணவர்கள் இருக்கின்றனர் அவர்களில் 1.4வீதமானவர்களுக்கே இணையத்தள வசதி இருக்கின்றது.

அதனால் நாட்டில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இணையத்தள வசதி பெற்றுக்கொடுப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் போதுமானளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அதேபோன்று நீதிமன்ற கட்டமைப்பை செயற்திறமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

நீதிமன்றங்களில் இருந்துவரும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் சிறைக்கைதிகளின் நலனோம்பு நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. வரவு செலவு திட்டத்தில் சிறைக்கைதிகளுக்கு என நிதி ஒதுக்கப்படுவது இது முதல் தடவையாகும்.

எனவே இந்த வரவு செலவு திட்டத்தை கடந்த காத்துடன் ஒப்பிடாமல் தற்காலத்தின் நிலைமையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒருவருக்கொடுவர் விரல் நீட்டிக்கொள்வதால் எந்த பயனும் இல்லை.

அதனால் குறைபாடுகளை திருத்திக்கொண்டு நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படுவதிலேயே வெற்றி இருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் நாங்கள் மேலும் வீழ்ச்சிப்பாதைக்கே செல்லும் என்றார்.