சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் தீர்வு!

z p09 Mahinda
z p09 Mahinda

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவர்களுக்கு துரித தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்று (06) ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்ற வளாகத்தின் குழு அறை 07 இல் வர்த்தக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்த வர்த்தகர்களுக்கு மேலும் கடன் நிவாரண காலத்தை  பெற்றுக்கொள்ளல் மற்றும் ஏலம் விடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறல் தொடர்பில் இதன்போது வர்த்தகர்கள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

பொருட்களின் விலையில் அடிக்கடி ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அதனூடாக மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் வர்த்தகர்களின் வரையறை வரம்பற்ற விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பது குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தினார்.

சுற்றுலாத்துறை, வெதுப்பகத் தொழில், பூஞ்செடி விற்பனை, வாகனப் உதிரிப் பாகங்கள் இறக்குமதி, ஆடை மற்றும் மாணிக்கக்கல் வர்த்தகம், உலோகப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மெனிங் சந்தை பிரச்சினை மற்றும் கட்டுமானத் தொழிற்துறை ஆகியவற்றை பாதித்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் வர்த்தகர்கள் இதன்போது கருத்துகளை முன்வைத்தனர்.

குறித்த பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.

குறித்த கலந்துரையாடலில் கௌரவ இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரொஷான் ரணசிங்க, லொஹான் ரத்வத்தே, இந்திக அனுருத்த, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் விஜித ரவிபிரிய, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி எஸ் கருணாரத்ன, அரச நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கே.சி சேனாநாயக்க, வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.விமலேந்திராஜா, பிரதமரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் குமாரி நயனா சேனாரத்ன, இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் எம்.டி.சி. நிலந்த, பிரதிப் பொது முகாமையாளர், பிராந்திய அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் எச்.எம்.எம் ஜயசிங்க மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.