இன முரண்பாடுகளை தீர்ப்பதன் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் – சாணக்கியன்

Sanakkiyan 012
Sanakkiyan 012

அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது விரட்டியடிக்கவோ நாம் முயற்சிக்கவில்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே விரும்புகின்றோம்.

அதற்கான சந்தர்ப்பத்தை எமக்கும் வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்

நாட்டின் இன முரண்பாடுகளை தீர்ப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (8 ) இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சு மற்றும் பிரம்புகள்,பித்தளை மட்பாண்டங்கள் ,மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றை கூறினார், 

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு கிழக்கில் தொழிற்சாலைகளை புதிதாக நிர்மாணிக்கவும், இருக்கின்ற தொழிற்சாலைகளை புனரமைக்கவும் தொடர்பாடல் ஒன்றினை உருவாக்க வேண்டும்.

தலைமன்னார் இராமேஸ்வரம் படகு சேவை, வடக்கு கிழக்கின் விமான நிலையங்களை புனரமைத்தல், புகையிரத சேவைகளை முன்னெடுக்க வேண்டும். துறைமுகங்கள், விமான நிலையங்களுடன் விரைவாக தொடர்புபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் நாம் வெளிநாடுகளில் சென்று இலங்கைக்கு முதலீடுகளை செய்யுமாறு கூறினோம், ஆனால் அவர்கள் கேட்கும் விடயம் ஒன்றுதான், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் நாட்டில் எப்போதும் குண்டு வெடிக்கலாம் என அச்சுறுத்தும் நிலையில் நாம் எவ்வாறு அங்கு வருவது என கேட்கின்றனர். ஆகவே இந்த நிலைமையில் எதிர்காலத்தில் நாட்டில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமையே ஏற்படும்.

இன்று பாகிஸ்தானில் வேறு இனக்குழு மூலமாக இலங்கை பிரஜை ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டதை போன்று இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் பல கொலைகள், அழிவுகள் இடம்பெற்றுள்ளன. தமிழர்கள் அடித்தும், எரித்தும் கொல்லப்பட்ட வரலாறுகள், அதற்கான ஆதரங்களுடன் உள்ளன. தமிழர் ஆயுதம் ஏந்த முன்னர் நீண்டகால அரசியல் போரட்டத்தை முன்னெடுத்தனர். அரசாங்கத்துடன் பேசி தீர்க்க முடியாத நிலையிலேயே ஆயுதம் எந்த நேர்ந்தது.

பலவீனமான, கவனயீனம் காரணமாக அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் நாடுகளுக்கு இடையில் பரவுவதாக ஜனாதிபதி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் அதுவே இடம்பெற்றுக்கொண்டுள்ளது. பெளத்த அடிப்படைவாதமே இலங்கையிலும் பரவிக்கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தின் மூலமாகவே கீழ்த்தரமான பதிவுகள் பதியப்படும் நிலைமை நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, நாட்டின் இன முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாது நாட்டை கட்டியெழுப்ப முடியும், அதற்கு முதலில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை கைவிட வேண்டும். இன முரண்பாடுகளை தீர்க்க வேண்டும்.

இன முரண்பாடுகளை தீர்க்க எமக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நாம் அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது வீட்டுக்கு அனுப்பவோ முயற்சிக்கவில்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே விரும்புகின்றோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.