முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி பொய்த்துள்ளது – செல்வம்

SELVAM
SELVAM

அரசாங்கம் வாக்குறுதியளித்ததுபோல் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க  தவறியுள்ளதாகவும், பலர் தற்கொலையும் செய்துகொள்ளும்  நிலையில்,  மேலும் பல முன்னாள் போராளிகள் வீதிகளில் கையேந்தி யாசகம் பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சு மற்றும் பிரம்புகள்,பித்தளை மட்பாண்டங்கள் ,மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய  அவர் மேலும் கூறுகையில்,

எங்கள் பிரதேசங்களில் பனைகளில் கிடைக்கும் பல பொருட்களை மக்கள் உற்பத்தி செய்கின்றனர். அதில் கூடுதலாக பெண் தலைமைத்துவ குடும்பங்களே ஈடுபடுகின்றன. அவர்கள் பல கைப்பணிப் பொருட்களை செய்யும் வாய்ப்புக்கள் எமது பிரதேசங்களில் உள்ளன. இவ்வாறான நிலையில் வடக்குகிழக்கு  மாகாணங்களில் இவ்வாறான உற்பத்திகளை எமது மக்கள்  செய்தாலும் அவற்றை என்ன செய்வதென தெரியாதுள்ளனர்.

ஏனெனில் எமது மக்களின் உற்பத்திப்பொருட்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றன. ஊரில் ஏதாவது திருவிழாக்கள் வந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்புள்ளது. இவ்வாறான பொருட்களை சந்தைப்படுத்த கைத்தொழில் அமைச்சு என்ன செய்துள்ளதென்பதனை அமைச்சர் இங்கு அறிவிக்க வேண்டும். எனவே எமது மக்களின் உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புக்களை கைத்தொழில் அமைச்சு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

 இதேவேளை தொழில் வாய்ப்பு  ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்  போராளிகளுக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. சிறு கைத்தொழில் முயற்சிகளுக்கு வங்கிக்கடன்கள் மூலம் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுப்பதாக அரசு கூறியிருந்தது. 

ஆனால் எதுவும் நடைபெறவில்லை. இதனால் முன்னாள் போராளிகள் வறுமை காரணமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை உள்ளது. பலர் தற்கொலையும் செய்துள்ளனர். மேலும் பல முன்னாள் போராளிகள் வீதிகளில் கையேந்தி யாசகம் பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

எனவே அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அரசு எந்த வசதி வாய்ப்புக்களையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றேன் என்றார்.